தஞ்சாவூர்: இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என அறியப்பட்ட பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் தனது வயது மூப்பு காரணமாக இன்று (செப்.28) சென்னையில் காலமானார். 1960-களில் கடும் உணவு பஞ்சம் ஏற்பட்டு இந்தியாவில் உணவு உற்பத்தி செய்ய முடியாமல் தவித்த போது, ஜப்பானில் கண்டறியப்பட்ட புதிய ரக கோதுமையை இந்தியாவில் அறிமுகம் செய்து யாரும் எதிர்பார்க்காத படி அதிக உற்பத்தியை ஏற்படுத்தியுடன் 200 சதவீத லாபத்தையும் ஏற்படுத்தி சாதித்தார். இதனை அப்போதைய இந்தியாவின் பிரதமர் இந்திரா காந்தி 'கோதுமை புரட்சி' என்று பாராட்டினார்.
திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில் விலங்கியலில் இளங்கலை பட்டமும், கோவை வேளாண் கல்லூரியில் இளநிலை பட்டமும், டெல்லியில் மரபணு பயிர்கள் குறித்த முதுநிலை பட்டமும் பெற்றார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றதோடு, 1948-ல் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று ஐபிஎஸ் அதிகாரியாக பணி கிடைத்தபோது, அதனை ஏற்காமல் ஆராய்ச்சியாளராக தனது சேவையை நாட்டிற்கு ஆற்றினார்.
தொடர்ந்து, அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலைக்கழகம், ஒடிசாவில் வேளாண்துறையில் அரசு பணி கிடைத்தும் இவர் ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இந்தியாவிலும் உலக அளவிலும் புகழ்பெற்ற ஆய்வு மையங்களில் சிறந்த பேராசிரியராகவும், ஆராய்ச்சியாளராகவும், தலைவராகவும் பணியாற்றிய இவர், மத்திய வேளாண்மைத்துறை செயலாளர், மத்திய திட்டக்குழு உறுப்பினர் உள்ளிட்ட பல பதவிகளை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய வேளாண்மை ஆராய்ச்சியில் அரிய பல சாதனைகளை புரிந்த எம்.எஸ்.சுவாமிநாதன் தனது பள்ளிப்படிப்பை தொடங்கியது, தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் நேட்டிவ் மேனிலைப்பள்ளியில் தான். பசுமை புரட்சி நாயகன், பசுமை புரட்சியின் தந்தை என போற்றப்படும் வேளாண் விஞ்ஞானி 1925ஆம் ஆண்டு ஆகஸ்ட் 07ஆம் தேதி கும்பகோணத்தில் பிறந்த, மரு.எம்.எஸ்.சுவாமிநாதன் தனது 98வது வயதில் இன்று சென்னையில் முற்பகல் 11.20 மணியளவில் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார்.
தனது விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பால், பசியில்லா வறுமையில்லா பாரதம் உருவாக்கும் முயற்சியில் வெற்றி கண்டு, உணவு உற்பத்தியை பெருக்கியவர், பல புதிய ரக நெல் ரகங்களை கண்டுபிடித்து அறிமுகம் செய்தவர் மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றிய இவரை பாராட்டும் முகமாக மத்திய அரசு, இவருக்கு பத்மபூஷண் விருது வழங்கியது.
இவர் கடந்த 1938ஆம் ஆண்டு கும்பகோணம் நேட்டிவ் மேனிலைப்பள்ளியில் 6ஆம் முதல் 8ஆம் வரை 3 ஆண்டுகள் கல்வி பயின்று இப்பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். இப்பள்ளியின் பழைய மாணவராக இவரை போற்றி பெருமைப்படுத்தப்பட்டு வந்த நிலையில் அவரது மறைவினை முன்னிட்டு, இன்று பள்ளி மைதானத்தில் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் இணைந்து மலர்தூவி ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படிங்க: ஐபிஎஸ் தேர்வில் வெற்றி முதல் வேளாண் புரட்சியின் தந்தை வரை.. எம்.எஸ்.சுவாமிநாதன் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள்!