தஞ்சாவூர்: தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் சரசுவதி மஹால் நூலகம், கலைக்கூடம், அரசுப் பள்ளி மற்றும் தீயணைப்பு நிலையம், மேற்கு காவல் நிலையம் ஆகியவை உள்ளது. இந்த சரசுவதி மஹால் நூலகத்தில் உள்ள புத்தகங்களைப் படிப்பதற்கும், குறிப்பெடுப்பதற்கும் உலக நாடுகள் முதல் உள்ளூர் வாசிகள் வரை பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் அருங்காட்சியகம் மற்றும் கைவினைப் பொருட்கள் விற்பனை மையமும் இங்குச் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தஞ்சை பெரியகோயிலுக்கு வரக்கூடிய வெளியூர் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் பயணிகள் பெரிய கோயில் மட்டுமின்றி அரண்மனை வளாகத்தில் உள்ள சரசுவதி மஹால் நூலகம், கலைக் கூடத்திற்கும் வருகை தருகின்றனர். சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதத்தில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அரண்மனைக்குச் செல்லும் முகப்பு மதில் சுவரில் அரசர்களின் வாழ்க்கை குறிப்பு, அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை, அரசவை, குதிரைப்படை, காலாட்படை, யானைப் படைகள், போர்வீரர்கள் என பழங்கால அரசர்களின் வாழ்க்கையை தத்ரூபமாக வரைந்திருந்தனர்.
தற்போது போதுமான பராமரிப்பு இல்லாததாலும், சுட்டெரிக்கும் வெயிலின் கொடுமையாலும் அந்த ஓவியங்கள் அழிந்துவிட்டது. அதுமட்டுமின்றி அரண்மனை வளாகத்தில் உள்ள அரசர் மேல்நிலைப்பள்ளி வளாக சுற்றுச்சுவர்களிலும் வரையப்பட்டிருந்த ஓவியங்களும் காலப்போக்கில் பராமரிப்பின்றி அழிந்தன. அதனால் பள்ளி சுவர்களில் விளம்பர நோட்டிஸ், அரசியல் கட்சிகளின் போஸ்டர்களே ஒட்டப்பட்டு வந்தன.
இந்த நிலையில், அரண்மனை வளாகத்தில் உள்ள சுவர்களில் மீண்டும் ஓவியங்கள் ஜொலிக்க வேண்டும் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் முடிவு செய்து அதற்கான உத்தரவைப் பிறப்பித்தார். இதனையடுத்து பழங்கால வரலாற்றைச் சுற்றுலாப் பயணிகள் அறிந்து கொள்ளும் வகையில், தத்ரூபமாக ஓவியங்கள் வரையத் திட்டமிடப்பட்டது. அதனடிப்படையில் ஓவியங்கள் வரையும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
அரண்மனை வளாகத்திற்குள் செல்லக்கூடிய இருபுறமும் அரசு மேல்நிலைப்பள்ளியின் சுற்றுச்சுவர்கள் உள்ளன. இந்த சுவர்களில் ஓவியங்கள் வரையும் பணியில் ஓவியர்கள் தர்மராஜா, ரமேஷ் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர். கும்பகோணம் கவின் கலைக்கல்லூரி முன்னாள் மாணவர்களான இவர்கள், 17-ம் நூற்றாண்டு ராமாயண இதிகாசத்தின் ஓவியங்களை வரைந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் கும்பகோணம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பழங்கால கோயில்களில் சுற்றுலாப் பயணிகள் பார்க்கும் வகையில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. தற்போது மொத்தம் 60 ஓவியங்கள் வரையப்பட இருக்கின்றன. இதுகுறித்து ஓவியர் ரமேஷ் கூறுகையில், "அரண்மனை சுவரில் 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டின் வரலாற்று ஓவியங்கள், இதிகாசங்கள், புராணங்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு ஓவியங்கள் வரையப்படுகின்றன. வரலாற்றுப் புராணங்களைத் தவிர்த்து, அவர்களின் நாகரிகம், பழக்க வழக்கம் ஆகியவை வரையப்பட்டுள்ளது. பின்வரும் காலங்களிலாவது இந்த வரைபடங்களைப் பொதுமக்கள் பாதுகாக்க வேண்டும்" என்று கூறினார்.
இதையும் படிங்க: இயக்குநர் கே.பாலச்சந்தருக்கு சிலை.. பூச்சி முருகன் அளித்த தகவல்!