திருக்காட்டுப்பள்ளி அருகே திருச்செனம்பூண்டி கிராமத்தில், கடந்த ஒரு சில தினங்களுக்கு முன், அரசு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. அப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளில் மூன்று முறை மணல் குவாரி அமைக்கப்பட்டு, மணல் எடுக்கப்பட்டு விட்ட நிலையில், தற்போது கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ், தண்ணீர் எடுத்துச் செல்லப்படுகிறது.
இந்நிலையில் தற்போது மீண்டும் அரசு மணல் குவாரி, அமைத்து மணல் எடுத்து வருவதைக் கண்டித்து, அப்பகுதி மக்கள் மட்டுமின்றி, சுற்றுவட்டாரப் பகுதிகளான அலமேலுபுரம்பூண்டி, கோவிலடி, சுக்காம்பார், அன்பில் என அனைத்து பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள் கூடி, கொள்ளிடம் ஆற்றில் இறங்கி, மணல் குவாரி அமைப்பதை வன்மையாகக் கண்டிப்பதாகக் கூறி, ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர் சிவகுமார், அமமுக கழக துணைச் செயலாளர் ரங்கசாமி, வழக்கறிஞர் பிரிவு வேலுகார்த்திகேயன், ஒன்றியச் செயலாளர்கள் மதியழகன், சுப்பு, பூதலூர் ஒன்றியத்தலைவர் செல்லக்கண்ணு, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் காந்தி, திருச்சின்னம்பூண்டி ஊராட்சி மன்றத் தலைவர் வடிவழகன் உள்பட 200 பெண்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் பாதுகாப்பு நடவடிக்கைக்காக திருவையாறு காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் சித்திரவேல் உள்பட 50க்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டு இருந்தனர். மேலும் ஆர்ப்பாட்டம் சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற நிலையில், இதே குவாரி தொடர்ந்து செயல்பட்டால், இதைவிட மிகப் பெரிய அளவிற்குப் போராட்டம் நடக்கும் எனத் தெரிவித்துக் கலைந்து சென்றனர்.