தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்த அம்மன்பேட்டை மணகரம்பை மெயின்ரோட்டில் வசித்துவந்தவர் புஷ்பம் (65). இவருக்கு திருமணமாகவில்லை. செவிலியராகப் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவர் உடல்நிலை சரியில்லாமல் மேலத்திருப்பந்துருத்தி உறவினர் வீட்டில் வசித்து வந்த நிலையில், நேற்று (மே.17) உயிரிழந்தார்.
இதனையடுத்து, அவரது உடலை அம்மன்பேட்டை மணகரம்பை மெயின்ரோட்டில் உள்ள வீட்டின் தோட்டத்தில் அடக்கம் செய்வதற்கு உறவினர்கள் முடிவு செய்தனர். இதனையறிந்த அப்பகுதி மக்கள் நடுக்காவேரி காவல் நிலையத்திற்கும், திருவையாறு வட்டாட்சியருக்கும் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் இளம்மாருதி, காவல் ஆய்வாளர் ஜெகதீசன், காவல் உதவி ஆய்வாளர் மகேந்திரன், கிராம நிர்வாக அலுவலர் பாஸ்கர் ஆகியோர் புஷ்பத்தின் உறவினர்களிடம் குடியிருப்பு பகுதியில் அடக்கம் செய்வதற்கு சட்டத்தில் இடம் இல்லை எனக் கூறி பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்ட நிலையில், புஷ்பத்தின் உடலை எங்கள் தோட்டத்தில் அடக்கம் செய்ய மாட்டோம் பக்கத்தில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்வோம் என்று உறவினர்கள் உத்தரவாதம் கொடுத்தனர். இதனையடுத்து, இறந்து போன புஷ்பத்தின் உடல் அருகில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டியதன் அவசியம் என்ன? - விஜயகாந்த் கேள்வி