தஞ்சாவூர் மாவட்டத்தில் வீடு வாடகைக்கு எடுத்து மசாஜ் சென்டர் எனக்கூறி, பாலியல் தொழில் நடைபெறுவதாக, காவல்துறையினருக்குப் புகார்கள் வந்தன. இது தொடர்பாக, திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. ஜெயராம், தஞ்சை டி.ஐ.ஜி. ரூபேஷ்குமார் மீனா, எஸ்.பி., தேஷ்முக்சேகர் சஞ்சய் ஆகியோர் உத்தரவின் பெயரில், காவல் உதவி ஆய்வாளர்கள் சந்திரசேகரன் (வல்லம்), கீர்த்திவாசன்(கும்பகோணம் தாலுகா), தென்னரசு (பட்டுக்கோட்டை டவுன்) ஆகியோர் தலைமையில் மாவட்டத்தில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகப் பகுதிக்குட்பட்ட காவேரி நகர், மூவேந்தர் நகர், தஞ்சாவூர் நகர் பகுதிகளில் மங்களபுரம், எல்.ஐ.சி. காலனி, முனிசிபல் காலனி, புதிய பேருந்து நிலையம், மூலிகை பண்ணை பகுதி உள்ளிட்ட இடங்களில், 4 மசாஜ் சென்டர்கள், 4 வீடுகளில் காவல்துறையினர் சோதனை நடத்தினர்.
தனியாக வீடுகளை வாடகைக்கு எடுத்தும், பெரிய பங்களாக்களை வாடகைக்கு எடுத்தும் ஸ்பா, மசாஜ் சென்டர் என்ற பெயரில் போலியாக, நிறுவனங்களை நடத்தி, அங்கு இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தியதும், இந்தத் தொழிலுக்காக ஆந்திரா, சென்னை, கோவை உள்பட பல்வேறு இடங்களில் இருந்து தரகர்கள் மூலம் பெண்களை அழைத்து வந்ததும் விசாரனையில் தெரியவந்தது.
இதனையடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 9 பெண்கள் அங்கிருந்து மீட்கப்பட்டனர். இந்த இளம்பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக, வழக்குரைஞர் ராஜேஷ், தரகர்கள், போலியாக மசாஜ் சென்டர்களை நடத்தியவர்கள், ஊழியர்கள் என, 19 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 31 செல்போன்கள், 2 கார்கள், 2 டூவீலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதொடர்பாக, தஞ்சாவூர் மாநகர பகுதிகளில் உள்ள காவல் நிலையம், தமிழ் பல்கலைக்கழக காவல் நிலையத்தில் மொத்தம் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.