தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பள்ளிகொண்டான் கிராமம், கரோனா இல்லாத ஊராட்சியாக விளங்குகிறது. சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் கரோனா தொற்றின் பரவல் அதிகரித்து உயிரிழப்புகள் அதிகரித்துவருகின்றன.
இந்நிலையில் நோய்ப்பரவலைத் தடுக்கும் வகையில் பள்ளிகொண்டான்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் மகாலிங்கம், தனது ஊரின் எல்லையில் இரண்டு இடங்களில் சோதனைச்சாவடி அமைத்துள்ளார். மேலும் சோதனைச்சாவடியில் தனது சொந்த செலவில் பணியாளர்களை நியமித்துள்ளார்.
கிராமத்திற்குள் நுழையும் அனைவருக்கும் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், உடல் வெப்பநிலை உள்ளிட்டவற்றை சோதித்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். சோதனையில் ஏதேனும் அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
ஊராட்சி மன்றத் தலைவரின் தீவிர தடுப்பு நடவடிக்கையால், கிராமத்தில் நோய்த் தொற்று இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தொற்றில்லா நிலையே தொடர்வதற்காக வெளியூரிலிருந்து வரும் நபர்கள் தடுப்பூசி செலுத்தியிருந்தால் மட்டுமே ஊருக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். ஊராட்சி மன்றத் தலைவரின் இந்த முயற்சி பலரது பாராட்டுகளையும் பெற்றுவருகிறது.
இதையும் படிங்க: கரோனா நோயாளிகளுக்கு 'செக்' - மருந்தகங்களுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவு