தெற்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது ஏப்ரல் 29ஆம் தேதி (அ) ஏப்ரல் 30ஆம் தேதி காலை கரையைக் கடக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து, தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு செய்துவருகிறது.
மற்றப் பகுதிகளை விட கடலோர மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுவருகிறது. இந்நிலையில், தஞ்சை கடற்பகுதியான பட்டுக்கோட்டை பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த முறை கஜா புயலில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. எனவே அப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரபடுத்தப்பட்டு வருகிறது.
இதையொட்டி பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் அலுவலர் பூங்கோதை தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்களுடன் அவசரக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சுகாதாரத் துறையினர் எந்த நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
கடலோரப் பகுதிகளில் வசிக்கும் கிராம மக்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புயல் பாதுகாப்பு இல்லங்களில் தங்கவைக்க தேவையான நடவடிக்கைகளையும் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும், கடலுக்குள் சென்றிருந்த மீனவர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு கரைக்குத் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீன்வளத் துறை அலுவலர்களிடம் வலியுறுத்தப்பட்டது.