உலகப் பிரசித்திப் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் பிரதோஷ வழிபாடு வெகு சிறப்பாக நடைபெற்றது. கடந்த 5 மாதங்களாக கரோனா ஊரடங்கு காரணமாக கோயில்கள் திறக்கப்படாத நிலையில் பக்தர்களின்றி கோயில் நிர்வாகிகளைக் கொண்டு பிரதோஷ வழிபாடு நடைபெற்றுவந்தது.
கடந்த 1ஆம் தேதி முதல் தமிழ்நாடு அரசு சில தளர்வுகளை அறிவித்த நிலையில் கோயில்கள் திறக்க சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று தஞ்சை பெரிய கோயிலில் 13 அடி நந்தியம் பெருமானுக்கு மஞ்சள், சந்தனம், தயிர், பால் உள்ளிட்ட ஒன்பது வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நந்தியபெருமானுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
கடந்த 14 பிரதோஷங்கள் பக்தர்களின்றி நடைபெற்ற நிலையில், தற்போது ஐந்து மாதங்களுக்குப் பிறகு இன்று பிரதோஷ வழிபாடு பக்தர்களுடன் நடைபெறுவதால் ஏராளமான பக்தர்கள் தகுந்த இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து நந்திய பெருமானை வழிபட்டனர்.
இதில் முகக்கவசம் அணிந்து வந்த பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். கோயில் நிர்வாகம் சார்பில் உள்ளே வரும் பக்தர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு சானிடைசர் வழங்கப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க:திருநள்ளாறு சனிபகவான் கோயிலில் ஆடி பிரதோஷ சிறப்பு வழிபாடு!