தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை தாலுகா நடுவிக்கோட்டை கிராமத்தில், சுமார் 100 ஏக்கர் விளைநிலங்களுக்கு நீராதாரமாக விளங்கி வந்தது நொச்சிகுளம். இக்குளம் சுமார் 5 ஏக்கர் 84 சென்ட் பரப்பளவு கொண்டது.
கல்லணை கால்வாயில் இருந்து வரும் காவிரி ஆற்று நீரை, இந்த குளத்தில் நிரப்பி இதன் மூலம் இங்குள்ள 100 ஏக்கர் விளைநிலங்களுக்கு நீர் பாய்ச்சப்படுகிறது.
விவசாயிகளின் வேதனை
இந்த குளத்தில் உள்ள நீரை கொண்டுதான் இங்கு உள்ள சிறு குறு விவசாயிகள் நெல் சாகுபடி செய்து தங்களது வாழ்வாதாரத்தை நடத்திவந்தனர்.
தற்போது இக்குளத்தை தனிநபர் ஆக்கிரமித்து தென்னை சாகுபடி செய்துவருவதாகவும், இதனால் சிறு குறு விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும், அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து விவசாயி துறை குணா கூறுகையில், “5 ஏக்கர் பரப்பளவு கொண்ட, நொச்சிகுளத்தினை தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்து, முழுவதையும் அடைத்து தென்னம்பிள்ளை போட்டுவிட்டார்கள்.
குளம் ஆக்கிரமிப்பு
இக்குளத்தை நம்பி 100 ஏக்கர் விவசாயிகள் உள்ளனர். தற்போது நொச்சிகுளத்தினை மூடியதால், 100 ஏக்கர் விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நீர் இல்லை என்ற காரணத்தினால் தங்களது நிலங்களை விற்பனை செய்து விட்டு புலம் பெயர்ந்து விட்டனர். நாங்கள் சிறு வயதில் இருந்தபோது குளமாக இருந்தது, தற்போது குளத்தை காணவில்லை
எனவே தமிழ்நாடு அரசு உடனடியாக குளத்தை கண்டுபிடித்து, 100 ஏக்கர் விவசாயத்தை காப்பாற்றுமாறு, குளத்தை மீட்டி இப்பகுதி மக்களுக்கு பயன்பாட்டிற்கு குடுக்குமாறும் மக்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
இதையடுத்து பேசிய மனோகரன், “எனது முன்னோர்களின் காலத்திலிருந்து ஆற்றின் தெற்கு பகுதியில் குளம் இருந்தது. அக்குளத்திலிருந்து விவசாய நிலங்களுக்கு நீர் பயன்படுத்தப்பட்டு வந்து. ஆனால் காலப்போக்கில் குளத்தை காணவில்லை.
நகைச்சுவை நடிகர் வடிவேலு கிணற்றை காணோம் என்று கூறுவது போல், இப்பகுதியில் குளத்தை காணவில்லை. குளம் இருந்த பகுதியில் தற்போது தென்னந்தோப்பாக உள்ளது. தனி நபர் ஒருவர் குளத்தை ஆக்கிரமித்து ஆண்டு வருகின்றனர். அக்குளத்தைனை மூட்டு, எங்களது கிராமத்திற்கு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இது குறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. தற்போது முதலமைச்சராக பதவி ஏற்றிருக்கும் மு க ஸ்டாலின், இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று முடித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?