தஞ்சாவூர்: தமிழக அரசு பள்ளிக்கூடங்கள் மூடப்படுவது காமராசரின் இலவச கல்வி மூடப்படுவதற்குச் சமம் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் திமுக அரசை குற்றம்சாட்டியுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சி, தஞ்சை தெற்கு மாவட்ட பொருளாதாரப் பிரிவு சார்பாக காமராஜர் பிறந்த நாள் விழா, கல்வி வளர்ச்சி தினம், மற்றும் மத்திய அரசின் 9ஆம் ஆண்டு சாதனை விளக்க கூட்டம் ஆகியவற்றை தஞ்சாவூரை அடுத்த துலுக்கம்பட்டியில் நடத்தியது. இவ்விழாவில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள், மற்றும் சீருடைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பொது சிவில் சட்டம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், 'எல்லா விஷயத்துக்கும் சாதக பாதகங்கள் விவாதம் நடைபெற்று வருகிறது. பொது சிவில் சட்டம் குறித்து வரைவு தீர்மானம் இன்னும் வரவில்லை, வரைவு தீர்மானம் வருவதற்கு முன்பே சரி இல்லை என்று சொல்வது எந்த வகையில் நியாயம்.
தீர்மானம் வந்தவுடன் அதன் கருத்துகளை சொல்லட்டும், பின்னர் எந்த வகையில் மக்களுக்கு ஏற்புடையதாக இருக்குமோ அந்த வகையில் கொண்டு வருவது அரசின் கடமை' என்று கூறினார். மேலும் 'தமிழக அரசு பள்ளிக்கூடம் மூடுகிறது என்று சொன்னால் காமராஜரின் இலவச கல்வி மூடப்படுகிறது, ஏழை மக்களின் எதிர்காலம் மூடப்படுகிறது என்பதே அர்த்தம்.
இதையும் படிங்க: Kalaingar library: ஷிவ் நாடாரை அழைத்தது ஏன்? - முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்
காமராஜர் இலவச கல்வியை கொண்டு வருவதற்கு முன்பு கட்டணம் செலுத்தி தான் தங்களது குழந்தைகளை படிக்க வைக்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால், மீண்டும் அந்த நிலைமைக்கு திமுக அரசு தள்ளியுள்ளது' என்று குற்றம்சாட்டினார்.
மேலும், 'தலைநகரை யார் ஆள வேண்டும் என்று நிர்ணயிக்க கூடிய கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. மாநிலங்களில் தங்களுக்குள் உள்ள பிரச்னைகளை எப்படி சரி செய்வது என்பது பற்றிய கூட்டம் பெங்களூரில் நடைபெறுகிறது. அது அதன் நிலையை உறுதிப்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது’, என்றும் கூறினார்.
மேகதாது அணை விவகாரத்தில், 'தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியை அழைத்துக் கொண்டு பெங்களூரு சென்று மேகதாது அணையைக் கட்டுவதை அனுமதிக்கமாட்டோம் என்ற நிலையை எடுத்துச்சொல்லி, கர்நாடகா அரசு அணையைக் கட்டாது என்ற நிலையை உறுதிப்படுத்த வேண்டும்', என்று கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மாவட்டத் தலைவர் ஜெய் சதீஷ், பொருளாதார பிரிவு மாவட்ட தலைவர் மதிமாறன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: Opposition parties meeting: பிரதமர் வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பு?