தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை அருகே சுக்காம்பார் பழைய தெருவைச் சேர்ந்தவர் இன்னாசிமுத்து என்பவரின் மகன் ஈசாக் (55). இவர், சைக்கிளில் சென்று காய்கறி வியாபாரம் செய்துவந்தார். இவருக்கு விஜயா (50) என்ற மனைவியும், ஆண்டனி ஆனந்த் ரூபன் (31) என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில், ஈசாக் தனது வீட்டின் கட்டிலில் தலை, நெற்றியில் பலத்த காயத்துடன் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்தார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த டிஎஸ்பி சித்திரவேல், ஆய்வாளர் விஜயலட்சுமி , உதவி ஆய்வாளர் கருணாகரன் உள்ளிட்ட காவல் துறையினர், ஈசாக்கின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணையைத் தொடங்கினர். மேலும், ஈசாக்கின் மரணத்தில் சந்தேகம் இருப்பதை தொடர்ந்து, தஞ்சை தடயவியல் நிபுணர் ராமச்சந்திரன் வீட்டிற்கு வந்து தடயங்கள் உள்ளனவா என்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, வீட்டில் அனைத்து இடங்களும் தண்ணீர் ஊற்றி கழுவி விடப்பட்டிருந்தது தெரியவந்தது. தொடர்ந்து ஈசாக்கின் மனைவி விஜயா, அவரது மகன் ஆண்டனி ஆனந்த ரூபன், விஜயாவின் தங்கை கணவர் பிரான்சிஸ் சேவியர் (52)ஆகிய மூன்று பேரையும் காவல் துறையினர் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
ஈசாக்கிற்கும் அவரது மகனுக்கும் சொத்து பிரச்னை இருந்துவந்ததால், அவரது மகன் கொலை செய்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் யாரும் கொலை செய்துவிட்டனரா என்னும் பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படங்க: மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த கணவர்