தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையில் ஆவின் பால் பண்ணை உள்ளது. இங்கு மேலாளராக திருமுருகன் (27) பணியாற்றி வந்தார்.
அதே பண்ணையில் நாமக்கல்லைச் சேர்ந்த அன்பானந்தன் (38) காவலாளியாக பணியாற்றி வருகிறார். அன்பானந்தன் சரியாக வேலை செய்யவில்லை எனக் கூறி மேலாளர் திருமுருகன் பணியிலிருந்து நீக்கியுள்ளார்.
இதனால் பால் பண்ணையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது காவலாளி அன்பானந்தன், மேலாளர் திருமுருகனை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றார்.
இதில் திருமுருகனின் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே சக பணியாளர்கள் திருமுருகனை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அன்பானந்தனை கைது செய்தனர்.