தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் காவல் நிலைய சரகம் தங்கப்ப உடையான்பட்டி கிராமத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக வல்லம் உட்கோட்ட குற்றப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் உத்தரவின் பேரில், வல்லம் காவல் துணை கண்காணிப்பாளர் சீதாராமன் மேற்பார்வையில் வல்லம் தனிப்படை உதவி ஆய்வாளர் சந்திரசேகரன் தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
அவர்கள் காட்டுப்பகுதியில் ஆய்வு செய்தபோது நாயக்கர்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஹரிஹரசுதன் (25), அதே பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து (28) ஆகிய இருவரும் காட்டுப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்ததைக் கண்டறிந்தனர்.
பின்னர், அவர்களை சுற்றி வளைத்து கைது செய்த காவல் துறையினர், அவர்களிடம் இருந்து சுமார் 600 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் மற்றும் 10 லிட்டர் கள்ளச்சாராயம் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.