தஞ்சை: தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டைக்கு சொகுசு காரில் கஞ்சா கடத்தப்படுவதாக காவல் துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் ஆங்காங்கே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பட்டுக்கோட்டையில் இருந்து வேகமாக வந்த காரை பாப்பாநாடு காவல் நிலைய போலீசார் நிறுத்த முயன்றனர். ஆனால், அந்த கார் நிற்காமல் வேகமாக சென்றுவிட்டது. இதையடுத்து அந்த சொகுசு காரை ஒரத்தநாடு காவல் நிலைய போலீசார் தென்னமநாடு பிரிவு சாலை அருகே மடக்கிப் பிடித்தனர். அப்போது காரின் ஓட்டுநர் சிக்கிக் கொண்ட நிலையில், காரில் இருந்த மேலும் இரண்டு பேர் தப்பியோடினர். அவர்களையும் போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
பின்னர் காரின் உள்ளே மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், மூவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில், காரை ஓட்டிவந்தவர் ஹரிமுருகன் (28) என்பதும், அவர் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் தீயணைப்புத்துறை வீரராகப் பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.
இதையும் படிங்க: சென்னையில் இவ்வளவு குற்றங்களா..? - புள்ளி விவரங்கள் வெளியீடு!