தஞ்சாவூர்: முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மாவீரர் நாள் நிகழ்ச்சி நேற்று (நவ.27) நடைபெற்றது. அதில் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் கலந்து கொண்டார். முன்னதாக அந்நிகழ்வில், தமிழீழத் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகாவின் கொள்கை பிரகடன உரை, இணையவழி காணொளிக் காட்சி மூலம் வெளியிடப்பட்டது.
அதில் பேசிய துவாரகா, "எத்தனை ஆபத்துகள், சவால்கள், நெருக்கடிகள், துரோகங்களைக் கடந்து உங்கள் முன் நான் வெளிப்படுகிறேன். அதைப்போல நான் தமிழீழ தாயகம் திரும்பி, அங்கு மக்களோடு இருந்து அவர்களுக்கான பணி செய்வதற்கு காலம் வாய்ப்பு அளிக்கும் என்று அசையாத நம்பிக்கை உண்டு.
அரசியல் சுதந்திரத்திற்கான எங்களது போராட்டம் முற்றுப் பெறவில்லை. அதற்கான போராட்டம் முனைப்புடன் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாம் சிங்கள மக்களுக்கு என்றுமே எதிரானவர்கள் அல்ல. சிங்கள மக்களுக்கு எதிராகவும் நாம் செயல்பட்டதில்லை.
சிங்கள அரசாலும், சுயநலம் கொண்ட சிங்கள அரசியல்வாதிகளாலும், திட்டமிட்ட வகையில் பொய்யான கருத்துக்கள் விதைக்கப்பட்டு, தமிழ் மக்களுக்கு எதிரானவர்களாக தூண்டிவிடப்பட்டார்கள் என்பதை நான் அறிவேன். நமது தேசியத் தலைவர் (பிரபாகரன்) குறிப்பிட்டதைப் போன்று பாதைகள் மாறலாம், ஆனால் ஒரு போதும் லட்சியம் மாறப்போவது இல்லை" என்று பேசினார்.
அதன் பின்னர், துவாரகாவின் உரை குறித்து செய்தியார்களைச் சந்தித்துப் பேசிய பழ.நெடுமாறன், "துவாரகாவின் உரை தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் எத்தகைய திட்டத்தை மேற்கொள்ள இருக்கிறார் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது. ஈழத் தமிழர்களுக்கான ஆயுதப் போராட்டம் மௌனம் செய்யப்பட்டு விட்டாலும் கூட, அவர்களின் அரசியல் போராட்டம் தொடரும்.
அதற்கு உலகெங்கும் இருக்கக் கூடிய தமிழர்கள் உதவுவதற்கு முன் வ ரவேண்டும் என்று அவரது உரையில் குறிப்பிட்டுள்ளார். பிரபாகரன் உள்பட அவருடைய குடும்பமே அழிந்து போய்விட்டது என பல பத்திரிகைகளில் செய்தி வந்தது. இப்போது அவருடைய புதல்வி, உலக மக்கள் முன்பு பகிரங்கமாக பேசியுள்ளார். அதன் பொருள் என்ன, இதற்கு பின்னணியில் பிரபாகரன் இருக்கிறார் என்பதுதான் உண்மை.
இளவேங்கை இன்று வந்து உறுமி இருக்கிறது, சினவேங்கை விரைவில் வந்து உறுமும். இந்த உரையை கேட்ட மக்கள் எல்லோருக்கும் எழுச்சியை ஏற்படுத்தும்" என்று கூறினார். மேலும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உலகத் தமிழர் பேரமைப்பு நிர்வாகிகள் முருகேசன், கென்னடி, பேராசிரியர் பாரி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: "அரசியல் போராட்டம் நடத்தி தமிழீழ உரிமைகளை வென்றெடுக்க வேண்டும்" - பிரபாகரன் மகள் துவாரகா என பெண் வீடியோ வெளியீடு!