தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி நிறைவடைந்த நிலையில், சம்பா மற்றும் தாளடி பயிர் விவசாயம், கடந்த 15 நாள்களுக்கு முன்பு தொடங்கி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த இரண்டு நாள்களாக பெய்த தொடர் மழையால் தஞ்சை மாவட்டத்தில் மட்டும் ஐந்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த சம்பா, தாளடி நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன.
வடிகால்கள் முறையாக பராமரிப்பு செய்தும் அதனை செப்பனிடாமல் இருந்ததால் தொடர்ந்து பெய்த கன மழையில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் மழையில் மூழ்கியுள்ளன.
இதனால் தங்களது உழைப்பு அனைத்தும் வீணாகியுள்ளது மட்டுமல்லாமல், ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, அரசு இதனைக் கருத்தில்கொண்டு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.