கும்பகோணத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது , சமீபத்தில் மத்திய ரயில்வே அமைச்சரை நேரில் சந்தித்து பேசும் போது, சுவாமி விவேகானந்தரை பெருமைப்படுத்தும் விதமாக, கும்பகோணம் ரயில் நிலையத்திற்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என்றும் கடந்த 2017ஆம் ஆண்டு அப்போதைய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்தப்படி, ரயில்வே அருங்காட்சியகத்தை விரைந்து தொடங்க வலியுறுத்தினேன் என்றும் கூறினார்.
கர்ப்பிணிகளுக்காண சத்துமாவு வழங்கும் திட்டத்தில் நடந்த டெண்டர் குளறுபடிகளுக்கு முன்னுக்குப் பன் முரணாக தவறான தகவல் அளித்ததால் அமைச்சர் ம. சுப்பிரமணியன் தான் தமிழ்நாடு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்தார்.
தமிழ்நாடு ஆளுநர், அந்த பதவிக்குரிய கண்ணியத்துடனேயே செயல்பட்டு வருகிறார்; இதுவரை அவர் அரசு குறித்தோ, அரசில் உள்ள தனிப்பட்ட நபர்கள் குறித்தோ பேசியது கிடையாது ; ஆனால் சத்திய பிரமாணம் எடுத்துக்கொண்ட தமிழ்நாடு அமைச்சர்களும், திமுகவின் முக்கிய பிரமுகர்களும் தனிப்பட்ட முறையில் ஆளுநரை விமர்சித்து பேசுவது கண்டிக்கதக்கது என்றார்.
சனாதான தர்மம் என்பது இந்து மதம் சார்ந்தது இல்லை; அது சாதி குறித்தும் பேசவில்லை. அது ஓர் வாழ்வியல் முறை, அதில் யாரையும், உயர்ந்தவர் தாழ்ந்தவர் என எங்கும் குறிப்பிடப்படவில்லை. அதுபோலவே, தொழில் ரீதியிலாகவும் யாரையும் மேலானவர், கீழானவர் என குறிப்பிடவில்லை. சனாதான தர்மம் குறித்த இரு பிரதிகள் இன்று டெல்லி நாடாளுமன்ற அருகாட்சியகத்தில் உள்ளது. இதனை தவறாக பேசுபவர்கள் நேரில் சென்று பார்த்து தெரிந்து கொள்ளலாம் என அண்ணாமலை குறிப்பிட்டார்.
கடந்த 2020ல் மருத்துவ மாணவர் சேர்க்கையின் போது 58% பேர் பயிற்சி வகுப்பிற்கு செல்லவில்லை என்றே எழுத்துப்பூர்வமாக குறிப்பிட்டுள்ளனர். ஆனால் தமிழ்நாடு அரசு, நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் 99% பேர் பயிற்சிக்கு சென்றவர்கள் என உண்மைக்கு மாறான தகவலை தந்துள்ளது என்றார். வரும் ஜூலை 17ஆம் தேதி நடைபெறும் நீட் தேர்வில் தமிழ்நாடு மாணவர்கள் 65% பேர் வெற்றி பெற்று புதிய சாதனை படைப்பார்கள்.
ஆனால், தமிழ்நாடு மாணவர்கள் அதிகம் பேர் வெற்றி பெறக்கூடாது என்பதற்காக மாநில அரசு, வழக்கமாக நீட் தேர்வு குறித்து ஆன்லைன் வாயிலாக அளிக்கும் இபாக்ஸ் எனும் பயிற்சியினை அளிக்க வேண்டாம் என உத்தரவிட்டு நாடகம் நடத்தி வருகிறது என்று அண்ணாமலை குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க: மதுரை மல்லியின் விலை திடீர் சரிவு; கிலோ ரூ.500க்கு விற்பனை