தஞ்சாவூர் மாவட்டம் திருப்புவனத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி மத மாற்றத்திற்கு எதிராக போராடிய ராமலிங்கம் என்பவர் வெட்டிக் கொல்லப்பட்டார். இக்கொலை வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தேசிய அளவில் பரபரப்பாக பேசப்பட்ட இக்கொலை வழக்கை என்.ஐ.ஏ எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததையடுத்து இந்த வழக்கு என்.ஐ.ஏ. விற்கு மாற்றப்பட்டது. இதையடுத்து கொச்சியிலிருந்து ஏ.எஸ்.பி. சவுக்கத் அலி தலைமையிலான 4 பேர் கொண்ட என்.ஐ.ஏ. குழுவினர் திருபுவனம் வந்து முகாமிட்டு தங்கள் விசாரணையை தொடங்கினர்.
முதற்கட்டமாக கொலை செய்யப்பட்ட ராமலிங்கத்தின் மூத்த மகன் விஸ்வாவிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதுகுறித்து குழுவில் உள்ள ஒரு அதிகாரி பேசியதாவது, "சில ஆதாரங்களை காவல் துறையிடம் கேட்டுள்ளதாகவும், அவை கையில் கிடைத்தவுடன் விசாரணை தீவிரமடையும் என தெரிவித்தார்.
இந்த கொலை வழக்கில் இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதால், அவர்களுக்கும் தீவிரவாத அமைப்புகளுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பதை கண்டறிய இந்த கொலை வழக்கு தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்