தஞ்சையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முத்தரசன், "கடந்தாண்டு முக்கொம்பூர் அணை உடைப்பு ஏற்பட்டு 140 டிஎம்சி அளவிற்கு தண்ணீர் வீணாக கடலில் கலந்தது. இந்த ஆண்டும் அதே நிலைதான் நீடிக்கிறது. டெல்டா மாவட்டத்தில் ஆறு, வாய்க்கால்களை தூர்வாரக் கூடிய பணி அவசர காலத்தில் நடைபெற்றது.
கஜா புயலில் விழுந்த மரங்கள் கூட ஆறுகளில் இன்று வரை அகற்றப்படாமல் அப்படியே கிடக்கின்றது. கல்லணை கால்வாயில் தண்ணீர் திறந்தாலும், கடைமடை பகுதிவரை செல்லுமா என்று சந்தேகம்தான். எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு நடைபெற்ற குடிமராமத்து பணியில் பொதுப்பணித்துறையினர் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்" என்று தெரிவித்தார்.
மேலும் அவர், "திருவாரூர் பல்கலைக் கழகத்தில் காஷ்மீர் பிரச்னை பற்றி ஆலோசனைக் கூட்டம் நடத்தியதாக 30 மாணவர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டதை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். காஷ்மீர் மாநிலத்தின் உரிமைகள் அனைத்தையும் பறித்து அந்த மாநிலத்தையே திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்றியிருப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது. அங்கு செல்லக்கூடிய தலைவர்களை விமான நிலையத்திலேயே தங்கவைத்து திருப்பி அனுப்பக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது" என்றார்.