தஞ்சாவூர் குருவாடிப்பட்டியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கூறியதாவது, விவசாயிகள் விளைவிக்கிற நெல்லை உடனடியாகக் கொள்முதல் செய்ய வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைந்த கொள்முதல் பருவத்தில் (காரீப்) 32.41 லட்சம் மெட்ரிக் டன்கள் கொள்முதல் செய்யப்பட்டது. இது, நேரடி நெல் கொள்முதல் நிலைய வரலாற்று சாதனை.
இதில், கரோனா பொது முடக்கக் காலத்தில் 12.76 லட்சம் மெட்ரிக் டன்கள் கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது. தற்போது தமிழ்நாடு முழுவதும் 826 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. குறுவை பருவத்தில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் 2.10 லட்சம் மெட்ரிக் டன்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகின்றன.
விவசாயிகளிடமிருந்து எந்த விதமான புகாரும் இல்லாமல் கொள்முதல் செய்ய வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம். எங்கேயாவது விவசாயிகளிடமிருந்து ஒரு ரூபாய் பணம் பெற்றுக் கொண்டால் கூட, அது அவமானத்துக்குரிய செயல். இதை பணியாளர்களிடம் ஒவ்வொரு கொள்முதல் பருவம் தொடங்கும்போதும் கூறிவிடுவோம். எனவே, இந்த அவமானகரமான செயலை எந்த ஊழியரும், அலுவலரும் செய்யக் கூடாது என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், புகார் வந்தாலோ, அதுபோன்ற செயலில் யாராவது ஈடுபட்டாலோ அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது ஒரே நாளில் அதிக அளவில் அறுவடை செய்யப்படுவதால், கொள்முதல் நிலையங்களுக்கு நெல் வரத்து அதிகமாகிவிடுகிறது. இதையும் இரண்டு நாள்களில் கொள்முதல் செய்துவிடுகிறோம். மேலும், தாமதமில்லாமல் கொள்முதல் செய்யப்படுவதற்கு அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களிலும் ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளோம். நெல் வரத்து அதிகமாக இருக்கும்போது, தேவைப்பட்டால் அதே ஊரில் மற்றொரு நெல் கொள்முதல் நிலையம் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்களில் 1.86 லட்சம் மெட்ரிக் டன்கள் ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த நெல்லை உடனடியாக அரவைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. 2011ஆம் ஆண்டு 12 லட்சம் மெட்ரிக் டன்களாக இருந்த கொள்முதல் அளவு தற்போது 23 லட்சம் மெட்ரிக் டன்களாக அதிகரித்துள்ளது. என்றாலும், கிடங்கு பிரச்னை கிடையாது. இதுவரை இல்லாத அளவுக்கு உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.