கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாள்களாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, நேற்று (அக்.31) இரவு 11.15 மணிக்கு உயிரிழந்தார். எக்மோ கருவியுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், நேற்றிரவு சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்ததாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த அக்டோபர் 13ஆம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவுக்கு ஆறுதல் தெரிவிக்க சென்னையில் இருந்து சேலத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தபோது, விழுப்புரம் அருகே செல்கையில் திடீரென அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து, முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சென்னை, ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில், கரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. அவருக்கு எக்மோ கருவி பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்றிரவு துரைக்கண்ணு சிகிச்சைப் பலனின்றி காலமானார்.