தஞ்சாவூர்: ஒரத்தநாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், கால்நடைகளுக்கு செய்யப்படும் அறுவை சிகிச்சை பணிகளை, கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று (ஜன.11) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறுகையில், “இங்குள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில், கால்நடைகளுக்கு பாதிப்புகள் இருப்பின், கல்லூரி மருத்துவமனை மூலமாக நிவர்த்தி செய்யப்படுகிறது. இக்கல்லூரியின் சிறப்பம்சமாக, இயற்கை முறையில் சிகிச்சை அளிக்க, முதலமைச்சர் உத்தரவின்படி, ரூ.13 கோடி அளவில் மூலிகைகளை வளர்த்து, அந்த மூலிகைகள் மூலம் மருத்துவ சிகிச்சை அளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தமிழகம் முழுவதும் கால்நடை மருத்துவமனைகளில் பணியிடங்கள் நிரப்புதல் தொடர்பாக வழக்கு நடைபெற்று வருகிறது. 15 நாட்களுக்குள் வழக்கு முடிவடைய உள்ள நிலையில், கால்நடைத்துறையில் உள்ள காலிப் பணியிடங்கள் அனைத்தும் விரைவில் நிரப்பப்படும். கடந்த ஆண்டில் தமிழகத்தில் ஒரே நேரத்தில் ஆயிரத்து 400 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டனர்.
எந்த குறைபாடும் இன்றி கோமாரி நோய்கான தடுப்பூசி தமிழகம் முழுவதும் போடப்பட்டுள்ளது. அனைத்து மருத்துவர்களும் கிராமந்தோறும் சென்று கோமாரி நோய்கான தடூப்பூசி போடும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்” இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர் நர்மதா, எம்எல்ஏ சந்திரசேகரன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: பொங்கல் பண்டிகை: நாளை முதல் 19,484 சிறப்பு பேருந்துகள்; எந்தெந்த ஊருக்கு எங்கிருந்து புறப்படும்!