தஞ்சாவூர்: தமிழ்நாடு அரசு சார்பில் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டும், வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையிலும், சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழி வகுத்திடும் திட்டமான கலைஞர் மகளிர் உரிமை திட்டம், தமிழ்நாடு முதலமைச்சரால் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான இன்று (செப்.15) காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடங்கப்பட்டது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மாபெரும் திட்டமாகும்.
அதேபோல் தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம், மாநகராட்சி மாநாடு கூட்ட அரங்கில் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் விழா நடைபெற்றது. காலை 11 மணிக்கு விழா நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்ட நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிர் பல்வேறு பகுதிகளில் இருந்து காலை 9 மணிக்கு பேருந்துக்கள் மூலம் அழைத்து வரப்பட்டு, நிகழ்ச்சியின் தொடக்கத்திற்காக பல மணிநேரம் விழா அரங்கில் காத்திருந்தனர்.
இதில் பலர் காலையில் உணவு சாப்பிடாமலே வந்திருந்ததாக கூறப்பட்டது. இதனால் நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் களைப்பில் அசந்து தூங்கினர். பின்னர் விழாவிற்கு சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாக 12:30 மணியளவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வந்தார். இதனையடுத்து விழா தொடங்கப்பட்டு மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
முன்னதாக நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது, "இந்த உரிமை தொகையை உங்களுடைய அண்ணன், தந்தை (முதலமைச்சர்) வழங்குகின்ற சீர்வரிசையாக பார்க்க வேண்டும். மாதந்தோறும் வழங்கும் இந்தத் தொகையை வீட்டில் உள்ள கணவர் கேட்டால் கொடுக்க கூடாது. வருடத்திற்கு ரூ.12 ஆயிரம் முதலமைச்சர் உங்களுக்காக தருகிறார் என்றால் பெண்கள் சுய மரியாதையோடு இருக்க வேண்டும், தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.
ஒரு நாடு முன்னேற்றம் அடைய வேண்டும் என்று சொன்னால் பெண்கள் முன்னேற்றம் அடைய வேண்டும். அந்த விதத்தில் தமிழ்நாடு முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறது. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் துறையின் கீழ் இந்த திட்டம் வருகிறது. தந்தையும் மகனும் போட்டி போட்டுக் கொண்டு தமிழ்நாட்டு மக்களின் குறிப்பாக மகளிர் மேம்பாட்டிற்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்" என்று பேசினார்.
இவ்விழாவில் பழநிமாணிக்கம் எம்பி, அரசு கொறடா செழியன், மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், எம்எல்ஏக்கள் சந்திரசேகரன், நீலமேகம், மேயர் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்திற்காக தமிழ்நாட்டில் ஒரு கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு நிலையில், ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் தகுதி உடையதாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் 5 லட்சத்தி 49 ஆயிரத்து 869 விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
இதையும் படிங்க: மகளிர் உரிமைத் தொகை திட்டம்; காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் துவங்கி வைத்தார்!