தஞ்சாவூர்: தஞ்சாவூர் சீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன், திலகா தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் கழித்து கடந்த மார்ச் மாதம் ஒரே பிரசவத்தில் 3 ஆண் குழந்தைகள் பிறந்தன. தற்போது வீட்டில் தாயும், சேயும் நலமாக உள்ளனர். இந்நிலையில், அன்னையர் தினம் மே மாதம் 14ஆம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு கார்த்திகேயன், திலகா தம்பதியினர் வீட்டிற்கு தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் ராமநாதன் 14ஆம் தேதி சென்று அவர்களை சந்தித்து, ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
இதுகுறித்து மேயர் கூறும்போது, “சீனிவாசபுரம் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திலகாவுக்கு கர்ப்பகால பரிசோதனைகளை மருத்துவக் குழுவினர் மேற்கொண்டனர். அப்போது, திலகாவுக்கு ஒரே நேரத்தில் 3 சிசுக்கள் கருத்தரிப்பதை உறுதி செய்தனர். இதைத் தொடர்ந்து, திலகாவுக்கு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் ஜனனி முறையான கர்ப்பகால பரிசோதனைகள் மற்றும் தொடர் கண்காணிப்புப் பணி செய்து வந்தார்.
இந்நிலையில், அரசு ராசா மிராசுதாரர் மருத்துவமனையில், திலகாவுக்கு கடந்த மார்ச் மாதம் ஒரு நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து 3 ஆண் குழந்தைகள் பிறந்தன. அப்போது, முதல் குழந்தை 1.5 கிலோ, இரண்டாவது குழந்தை 1.3 கிலோ மற்றும் மூன்றாவது குழந்தை 1 கிலோ என்ற எடையில் பிறந்தது.
இதையடுத்து, திலகாவுக்கு மகப்பேறு பின் கவனிப்பு காலத்தில், இல்லம் ரீதியான சிசு பராமரிப்பு மற்றும் கவனிப்பு திட்டத்தின் கீழ் சிசுவின் எடை அளவு, தாய்ப்பாலின் முக்கியத்துவம், தடுப்பூசி உள்ளிட்டவற்றை முறையாக செவிலியர் மேற்கொண்டதால், குழந்தைகளின் எடை அதிகரித்துள்ளது. தற்போது குழந்தையும் தாயும் நலமுடன் இருக்கின்றனர்” எனக் கூறினார்.
மேலும், அர்ப்பணிப்புடன் சிறப்பாகப் பணியாற்றிய மருத்துவக் குழுவினரை பாராட்டுவதாகத் தெரிவித்தார். திலகாவின் கணவர் கார்த்திகேயன் மாற்றுத்திறனாளி என்பதாலும், அவர்களுடைய குடும்பத்தின் ஏழ்மை நிலையைக் கருத்தில் கொண்டும், அவர்களுக்குத் தேவையான வாழ்வாதார முன்னேற்ற உதவிகள் செய்து தரப்படும் என்றும் மேயர் தெரிவித்தார். இந்நிகழ்வில் மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவர் மேத்தா மற்றும் மாநகர நல அலுவலர் சுபாஷ் காந்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு உதிரி பாகங்கள் எடுத்துச் செல்ல மின் நிறுத்தம்; கிராம மக்கள் சாலை மறியல்!