தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினந்தோறும் ஐந்தாயிரத்தை தாண்டுகிறது.
அந்த வகையில், தஞ்சாவூர் மாவட்டத்திலும் கடந்த சில நாள்களாகத் தொற்று பாதிப்பு அதிகரித்துவருகிறது. இதுவரை 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா பரவலைத் தடுக்க மாநகராட்சி அலுவலர்கள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.
வெளியில் வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும், அணியாவிட்டால் 100 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் எனவும் மாநகராட்சி தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
அதன்படி நேற்று (அக். 1) முகக்கவசம் இல்லாமல் வெளியே வந்தவர்களிடம் 100 ரூபாய் அபராதம் வசூலித்தது மட்டுமின்றி நடமாடும் கரோனா பரிசோதனை மையத்தில் அவர்களுக்கு கட்டாய கரோனா பரிசோதனையும் மாநகராட்சி அலுவலர்கள் மேற்கொண்டனர்.