தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் பூதலூரைச் சேர்ந்தவர் கணேசன். இவர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். தனியார் வங்கி ஒன்றில் கணக்கு வைத்துள்ள கணேசன், அந்த வங்கி மூலம் கிரெடிட் கார்டு உள்ளிட்டவை கடன் அட்டைகளையும் பெற்று உள்ளார்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன், கணேசன் தனது நண்பர் ஒருவருக்கு ரூபாய் ஆயிரம் ஆன்லைன் (ஜிபே செயலி) செயலி மூலம் பணம் அனுப்பி உள்ளார். அப்போது அதற்கான குறுந்தகவல் அவருக்கு வந்துள்ளது. அதில் அவருடைய வங்கிக் கணக்கில் 756 கோடியே 39 லட்சத்து 65 ஆயிரத்து 907 ரூபாய் இருப்பு இருப்பதாக செய்தி வந்துள்ளது.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், அவரது வங்கிக் கணக்கில் பணம் இல்லாத நிலையில் இவ்வளவு தொகை எப்படி வந்தது என தெரியாமல் குழப்பத்தில் இருந்து உள்ளார். பின்னர், அருகில் இருந்த ஏடிஎம் மையத்துக்குச் சென்று சரி பார்த்தபோது, அதில் அவரது கணக்கில் பணம் இல்லை என தகவல் வந்துள்ளது.
ஆனால் தனக்கு வந்த குறுந்தகவலில் 756 கோடி ரூபாய் இருப்பதாக வந்ததால், மறுநாள் வங்கிக்குச் சென்று விவரம் தெரிந்து கொள்ளலாம் என முடிவு செய்துள்ளார். அதன்படி தவறுதலாக குறுஞ்செய்தி அனுப்பப்பட்ட தனியார் வங்கிக்குச் சென்று, வங்கி மேலாளரை தொடர்பு கொண்டுள்ளார்.
இதுகுறித்து வங்கி அதிகாரிகள், கணேசனுக்கு சென்ற குறுஞ்செய்தி மற்றும் மற்ற அனைத்து தகவல்களை கேட்டு பெற்றுக்கொண்டனர். பின்னர், இது குறித்து ஆய்வு செய்வதாகவும் அவர்கள் பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இதன் முழு விவரம் வங்கி நடவடிக்கைக்குப் பின்னரே தெரியவரும் என கணேசனுக்கு தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் சென்னையில் கார் ஓட்டுநரின் வங்கி கணக்கில் தனியார் வங்கியில் இருந்து 9 ஆயிரம் கோடி ரூபாய் வரவு வைத்து, பின்னர், தவறுதலாக அந்த பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது எனக் கூறி, அதனை மீண்டும் வங்கியே எடுத்துக் கொண்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அந்த அலை சற்று ஓயும் முன்னரே, மீண்டும் தஞ்சாவூரில் இது போன்ற சம்பவம் அரங்கேறி இருப்பது பொது மக்களிடையே பேசு பொருளாகி உள்ளது. தனியார் வங்கிகளின் அலட்சிய போக்கால் இவ்வாறான செய்லகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும், தனியார் வங்கி ஊழியர்களின் மெத்தனப்போக்கை கண்டித்து அதிகாரிகள் இதுபோன்று செயல்களை தவிர்க்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதையும் படிங்க: தினை மாவுப் பொருட்களின் விலை குறைகிறது.. 52வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு!