தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் பிறையணி அம்மன் சமேத நாகநாத சுவாமி திருக்கோயில் திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தர் சுந்தரர் ஆகியோரால், தேவாரப்பாடல் பெற்ற சைவத்திருத்தலமாகும். இந்தத் தலம் திருமால் சூரியன், சந்திரன் உள்ளிட்ட தேவர்கள் ராகு பகவான் நாகநாதசுவாமியை மகா சிவராத்திரி தினத்தில், வழிபட்டு தங்களது பாவத்தை நிவர்த்தி செய்த பெருமைமிகு தலமாகும்.
நவக்கிரக ஸ்தலங்களில் ராகு பகவானுக்குரிய ஸ்தலமாக போற்றப்படும் இத்தலத்தில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா விசேஷ ஹோமம், 1,008 சங்காபிஷேகம் தொடர்ந்து இரவு முழுவதும் நான்கு கால அபிஷேகம் ஆராதனைகள் என சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அதுபோலவே, மாசி மாதம் மகாசிவராத்திரி தினமான இன்று(பிப்.18) இரு புனிதநீர் நிரப்பிய கடங்களை சுவாமி அம்பாளாக ஸ்தாபித்த பிறகு, புனித நீர் நிரப்பிய 1,008 வலம்புரி சங்குகளை நெல்மணிகள் மீது வைத்து, அதற்கு சந்தனம், குங்கும் பொட்டு வைத்து, உதரி மலர்கள் சூட்டி, சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் ஜபிக்க, விசேஷ ஹோமம் வளர்த்து, அதன் நிறைவாக, பூர்ணாஹீதியும் பின்னர் மங்கள வாத்தியங்கள் முழங்கப்பட்டது.
கடம் புறப்பாடு நடைபெற்று, நாகநாதசுவாமிக்கு பல்வேறு மிதமான வாசனை திரவியங்களைக் கொண்டு அபிஷேகமும், தொடர்ந்து 1,008 சங்காபிஷேகம் பின்னர், கலசத்தில் உள்ள நீரை கொண்டு, சுவாமிக்கும், அம்பாளுக்கும் மகா அபிஷேகமும் முடிந்த பிறகு சிறப்பு பட்டு மற்றும் மலர் அலங்காரத்தில் அருள்பாலித்த நாகநாதசுவாமிக்கு மகா தீபாராதனை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
இதையும் படிங்க:சீமானை கைது செய்யக்கோரி ஈரோடு கிழக்கு தொகுதியில் போராட்டம்