தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்த கோனேரிராஜபுரம் மணத்திடல் கிராமத்தில் சிவக்குமார் என்ற விவசாயி தன்னுடைய வீட்டின் தோட்டத்தில் பழா, சுண்டைகாய், கருவேப்பிலை, பப்பாளி போன்ற வீட்டிற்குத் தேவையான தாவரங்களை வளர்த்துவருகிறார்.
இந்நிலையில் திடீரென பழா செடியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வெட்டுக்கிளிகள் அமர்ந்துள்ளதைக் கண்டு அதிர்ந்துபோயுள்ளார். வெளிமாநிலத்தில் பயிர்களை வெட்டிகிளிகள் தாக்கி வருவதுபோல் நம்முடைய பகுதிக்கும் படையெடுத்து வந்துவிட்டதோ என அச்சம் அடைந்து வேளாண்மைத் துறைக்குத் தகவல் கொடுத்துள்ளார்.
அந்தத் தகவலின்பேரில் தஞ்சை மாவட்ட வேளாண்மை துறை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) சாருமதி உள்ளிட்ட வேளாண் அலுவலர்கள் வந்து விவசாயி வீட்டின் தோட்டத்தில் சென்று ஆய்வு நடத்தினர்.
இது குறித்து வேளாண்மை உதவி இயக்குநர் சாருமதி கூறுகையில், “இது எந்த வகை வெட்டுகிளி என ஆய்வுசெய்தோம். அதில் இந்த வெட்டுக்கிளியானது உள்ளுர் வெட்டுக்கிளி எனத் தெரியவந்தது. இதைக் கட்டுப்படுத்துவதற்கு அரசு பரிந்துரை செய்துள்ளது. அதன்படி வெட்டுக்கிளியைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
இதையும் படிங்க...கரோனாவால் கைதிகளின் கைவினைப்பொருள்கள் தயாரிக்கும் பணி நிறுத்தம்!