தஞ்சாவூர்: தேமுதிக நிர்வாகி ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கும்பகோணத்திற்கு வருகை தந்த தேமுதிக துணைப் பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ், திருமணத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது பேசிய அவர், 'ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேமுதிகவிற்கு திருப்புமுனையாக அமையும், இந்த தேர்தலில் தேமுதிக வேட்பாளர் ஆனந்திற்கு வரிசை எண் ஒன்று கிடைத்துள்ளது. இதுவே தேமுதிகவிற்கு கிடைத்த முதல் வெற்றியாகப் பார்க்கிறோம். தேமுதிக வேட்பாளர் ஆனந்த் அதிக வாக்கு பெறுவார். 2002-ல் தொடங்கப்பட்ட தேமுதிகவின் 22-வது கொடி நாள் இன்று' எனத் தெரிவித்தார்.
'கடந்த சில நாட்களாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் இருந்த நான், கேப்டன் உத்தரவிற்கிணங்க, நந்தகுமார் திருமணத்திற்கு வருகை தந்துள்ளேன். மேலும், மணமக்கள் ஒருவருக்கு ஒருவர் வாழ்வில் விட்டுக் கொடுத்து, பல்லாண்டு காலம் நீடோடி வாழ வேண்டும்' என வாழ்த்தினார். இதில் ஏராளமான தேமுதிக நிர்வாகிகளும், தொண்டர்களும், உற்றார், உறவினர்களும் நண்பர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஈரோடு கிழக்கு: தென்னரசுக்கு ஆதரவாக களமிறங்கிய அதிமுக மாஜி அமைச்சர்