தஞ்சாவூர்: கும்பகோணம் அடுத்த திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயில் நவக்கிரகங்களில் உள்ள ராகு பகவானுக்குரிய ஸ்தலமாக போற்றப்படுகிறது. இந்த ஸ்தலத்தில் ஸ்ரீ நாகவல்லி, நாககன்னி ஆகிய இரு மனைவியருடன் ராகுபகவான் திருமண கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
ஆண்டுதோறும் இந்த கோயிலில் கார்த்திகை கடை ஞாயிறு பெருவிழா 11 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு கடந்த 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. நாள்தோறும் கிளி, சிம்ம, பூத, யானை, குதிரை, அன்னம், ஐந்து தலை நாகம், கைலாச வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் ராகு பகவான் திருவீதியுலா வருகிறார்.
விழாவின் 9-ஆம் நாளான நேற்று (டிசம்பர் 10ஆம் தேதி) தேரோட்டம் நடைபெற்றது. தொடர்ந்து 10-ம் நாளான இன்று(டிசம்பர் 11ஆம் தேதி) கார்த்திகை கடைஞாயிறை முன்னிட்டு, தனித்தனி வெள்ளி ரிஷப வாகனங்களில், நாகநாதசுவாம, கிரிகுஜாம்பிகை, சண்டிகேஸ்வரர் சுவாமிகள் கோயிலின் சூர்யபுஷ்கரணி குளக்கரையில் அமைக்கப்பட்ட பந்தலில் எழுந்தருளினர்.
தொடர்ந்து சுவாமிகளுக்கு மாப்பொடி, திரவியப்பொடி, மஞ்சள்பொடி, தேன், பால், பஞ்சாமிர்தம், தயிர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் அஸ்திர தேவருடன், திருக்குளத்தில் இறங்கி, மும்முறை முங்கி எழ, கார்த்திகை கடைஞாயிறு தீர்த்தவாரி சிறப்பாக நடைபெற்றது.
அப்போது அங்கு திரண்டிருந்த ஏராளமானோர் குளத்தில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து கரையில் எழுந்தருளிய பஞ்சமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, கோபுர ஆர்த்தியும், பஞ்சாரத்தியும் செய்யப்பட்டது. கொட்டும் மழையினையும் பொருட்படுத்தாமல், ஆயிரத்திக்கணக்கான மக்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: ஆர்யா - சாயிஷா தம்பதியின் அமுல் பேபி புகைப்படம் வெளியீடு!