சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் 2004ஆம் ஆண்டு நடைபெற்ற குடமுழுக்கு விழாவின்போது, அங்குள்ள வனநாதர் சன்னதியிலிருந்த மயில் கற்சிலை மாற்றப்பட்டது.
இதையடுத்து, மாற்றப்பட்ட சிலை மாயமானதாக தொடரப்பட்ட வழக்கில், அப்போது அறநிலையத் துறை கூடுதல் ஆணையராக இருந்த திருமகள் கைது செய்யப்பட்டார்.
பின்னர், திருமகள் நீதிமன்றத்தில் நிபந்தனையுடன் கூடிய பிணை பெற்று வெளியே வந்தார். இந்நிலையில், வெளியே வந்த திருமகளின் பிணையை ரத்து செய்து அவரிடம் கூடுதல் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் கும்பகோணம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இதனைத் தொடர்ந்து, இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, திருமகளின் பிணையை ரத்து செய்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். மேலும், பிணை ரத்து செய்யப்பட்டதையடுத்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் இவரிடம் விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.