தஞ்சாவூர்: சுவாமிநாத சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா இன்று கோலாகலமாகத் துவங்கியது. இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்தும், தீபம் ஏற்றியும் தரிசனம் செய்தனர். திங்கட்கிழமையான இன்று தொடங்கிய இந்த திருவிழா பத்து நாட்களுக்குத் தொடர்ந்து நடைபெறவுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 18ஆம் தேதி சனிக்கிழமை இரவு நடைபெற உள்ளது.
கும்பகோணம் அருகே உள்ளது சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில். இது தமிழ் கடவுள் எனப் போற்றப்படும் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடாகும். இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும், கந்த சஷ்டி திருவிழா ஐப்பசி மாத அமாவாசை தினத்திலிருந்து 10 நாட்களுக்குத் தொடர்ந்து நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டும் இவ்விழா தீபாவளி தினத்திற்கு மறுதினமான இன்று தொடங்கியது. காலை சந்திரசேகரர், அம்பாள், வள்ளி, தெய்வானை, சண்முகர் சமமேதராக வீரகேசரி, வீரபாகு ஆகியோருடன் மலைக்கோயிலிலிருந்து படியிறங்கி உற்சவ மண்டபத்திற்கு எழுந்தருளினர்.
இதையும் படிங்க: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா தொடங்கியது!
நாள்தோறும் காலை மாலை என இரு வேளையிலும் சந்திரசேகர், வீரபாகு மற்றும் வீரகேசரி ஆகியோர் சூரபத்மனை எதிர்கொண்ட பின் திருவீதியுலா நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியாக 6ஆம் நாளான, வரும் 18ஆம் தேதி சனிக்கிழமை காலை 11 மணியளவில், வள்ளி - தெய்வானை சமேத சண்முகருக்கு 108 சங்காபிஷேகம் நடைபெறும்.
தொடர்ந்து மாலை தாயார் மீனாட்சி அம்மனிடம், சண்முகர் சுவாமி ஆட்டுக்கிடா வாகனத்தில் வந்து சக்திவேல் வாங்கும் நிகழ்வு நடைபெறும். பின்னர், கிழக்கு சன்னதியில் கஜமுக சூரன் மற்றும் சிங்கமுக சூரன் ஆகியோரை வதம் செய்கின்ற நிகழ்வும், தெற்கு வீதியில் சூரபத்மனை வதம் செய்கின்ற நிகழ்வும் என சூரசம்ஹாரம் நடைபெறும். பின்னர் நிறைவாக, தங்கமயில் வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெறும்.
மேலும், வரும் 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை சண்முகர் காவிரியாற்றில் குருதி கழுவுதல் நிகழ்ச்சியும், அன்று இரவு தெய்வானை திருக்கல்யாண வைபவம் ஆகியவை நடைபெற உள்ளது. பின்னர் 20, 21 மற்றும் 22 ஆகிய மூன்று தேதிகளில் ஊஞ்சல் உற்சவமும் நடைபெறவுள்ளது. கந்தசஷ்டி விழா நாட்களில், மூலவரான சுவாமிநாத சுவாமிக்கு, சிறப்பு அபிஷேக ஆராதனையும், சண்முகார்ச்சனையும் நடைபெறவிருக்கிறது.
இன்று நடைபெற்ற கந்த சஷ்டி திருவிழா நிகழ்வில் கோயில் துணை ஆணையர் உமாதேவி உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்தும் தீபம் ஏற்றியும் தரிசனம் செய்தனர்.