தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த பாபநாசத்தில் அனைத்து இஸ்லாமிய ஜமாத் சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி சமுதாய நல்லிணக்க பேரவைத் தலைவர் முபாரக் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய முபாரக், இந்திய அரசியல் சாசனத்தின் புனிதத்தை சீர்குலைக்கும் வகையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றவுள்ள மத்திய பாஜக அரசை வன்மையாகக் கண்டித்தும், மக்களிடையே மதத்தின் பெயரால் பிளவை ஏற்படுத்தும் தனது தொடர் முயற்சிகளை பாஜக அரசு நிறுத்திக் கொள்ளாவிட்டால் இந்திய ஒருமைப்பாட்டிற்கு அது பெரும் அச்சுறுத்தலாக அமைந்துவிடும் எனவும் மத்திய அரசு எச்சரித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், இஸ்லாமியர்கள் விவகாரத்தில் உணர்வை இலக்காகக் கொண்டு செயல்படுவதை மத்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும். இதனால் ஏற்படக்கூடிய விளைவுகளை கவனத்தில்கொண்டு உச்ச நீதிமன்றம் சட்ட விவகாரத்தில் நல்லதொரு தீர்ப்பை வழங்க வேண்டும். இலங்கை தமிழ் அகதிகளையும், உலகின் படுமோசமான நிலையில் உள்ள ரோஹிஞ் அகதிகளையும் திட்டமிட்டு புறக்கணித்துவருவது கடும் கண்டனத்துக்குரியது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ்நாடு சட்டப்பேரவையில் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளார். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரஜினி குறிப்பிட்ட 'அந்த' ஊர்வல செய்தியை மீண்டும் பிரசுரித்த துக்ளக்!