தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை துணை வேந்தராக ஜி.பாஸ்கரன் பதவி வகித்தார். அப்போது தகுதியற்ற நபர்களை விதிமுறைகளை பின்பற்றாமல் பேராசிரியராக பணி நியமனம் செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதன் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை நடத்தினர். இதற்கு பல்கலைக்கழகம் சார்பில், சரியான ஒத்துழைப்பு அளிக்கவில்லை.
இதையடுத்து ஒய்வு பெற்ற பேராசிரியர் முருகேசன் மற்றும் வக்கீல் நெடுஞ்செழியன் இருவரும் தனித்தனியாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில், பொது நல வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தஞ்சை லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணைக்கு பல்கலை நிர்வாகம் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.
நீதிமன்ற உத்தரவின்பேரில், பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பல்வேறு கட்ட விசாரணைக்குப் பிறகு, லஞ்ச ஒழிப்பு துறையினர் சில ஆவணங்களை கைப்பற்றி நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறையினர் கடந்த 14ஆம் தேதி, பேராசிரியர் நியமனத்தில் முறைகேட்டில் ஈடுப்பட்டதாக, முன்னாள் துணை வேந்தர் ஜி.பாஸ்கரன், முன்னாள் பதிவாளர் முத்துக்குமார், பதிவாளர் நேர்முக உதவியாளர் சக்தி சரவணன் மற்றும் தொலைத்துார கல்வி இயக்கத்தின் இயக்குநர் என்.பாஸ்கரன் ஆகிய நான்கு பேர் மீது 11 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 2015ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை துணை வேந்தராக இருந்த பாஸ்கரன், கடந்த 2017 ஏப்.,26ல் 27 பேராசிரியர்,18 இணை பேராசிரியர் ஆக மொத்தம் 45 பணிக்கான தேர்வு தொடர்பான விளம்பரம் அறிவிக்கப்பட்டு, பல்கலைக்கழக குழு சார்பில் தேர்வு நடைபெற்றது. அதில் 23 பேர் மட்டுமே முறையாக தேர்வு செய்யப்பட்டனர்.
மீதமுள்ள 22 நபர்களும் பல்கலைக்கழக விதிகளுக்கு புறம்பாகவும், தகுதியற்ற நபர்களையும் துணைவேந்தர் அறிவுறுத்தலின் பெயரில் தேர்வு செய்யப்பட்டு, பல்வேறு துறைகளில் பணிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், துணை வேந்தர் பாஸ்கரன் நேரடியாக 5 பேரை நியமனம் செய்வதற்காக பதிவாளர் நேர்முக உதவியாளர் சக்தி சண்முகத்தின் மூலம் 15 முதல் 40 லட்சம் ரூபாய் பணம் வரை லஞ்ச பணத்தை கேட்டு பெற முயற்சித்தாகவும், மேலும் பேராசிரியர்கள் அல்லாத பணிகளுக்கு 70 பேரை முறைகேடாக பதிவாளர் முத்துக்குமார், தொலைத்துார கல்வி இயக்கத்தின் இயக்குநர் என்.பாஸ்கரன் இருவரும், துணை வேந்தர் பாஸ்கரனின் ஒப்புதல் பெற்று, அதற்கான லஞ்சத்தை தருவதாக பேசி நியமனம் செய்துள்ளதாகவும், முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வு இருக்கை : ஒ.பி.எஸ். உறுதி..!