தஞ்சாவூர்: ஸ்ரீனிவாச இராமானுஜனின் 137வது பிறந்தநாளை முன்னிட்டு, 19வது சர்வதேச கணித கருத்தரங்கம் மற்றும் சாஸ்த்ரா இராமானுஜன் விருது வழங்கும் விழா கும்பகோணம் சாஸ்த்ரா பல்கலைக்கழக ஸ்ரீனிவாச இராமானுஜன் மையத்தில் இன்று (டிச.22) நடைபெற்றது. இதில் இந்தியா மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து கணிதத்துறை வல்லுநர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஆய்வுத்துறை மாணவர்கள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளுக்காக சர்வதேச சாஸ்த்ரா ராமானுஜன் விருது வழங்கும் விழா, பல்கலைக்கழகத் தலைவர் சுவாமிநாதன் தலைமையிலும், சர்வதேச விருது வழங்கும் குழுத் தலைவரான கிருஷ்ணசாமி அல்லாடி முன்னிலையிலும் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் தேசிய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறைச் செயலாளர் முனைவர் ராமசாமி கலந்து கொண்டார். இந்த ஆண்டு விருதுகளை அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழக கணித பேராசிரியர்களான முனைவர் ருய்சி சங் (2023) மற்றும் முனைவர் யன்குவின் டேங் (2022) ஆகியோருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்த விருதானது, தலா 10 ஆயிரம் அமெரிக்க டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 8 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் மற்றும் விருது பட்டயத்தையும் கொண்டுள்ளது. சர்வதேச விருதான இந்த விருது, சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தால், கடந்த 2005ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. உலகளவில் ஸ்ரீனீவாச இரமானுஜனின் எண்ணியலில் சிறப்பான ஆராய்ச்சி மேற்கொள்வது இதன் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டு, 32 வயதிற்குட்பட்ட கணிதவியல் ஆராய்ச்சியாளர்களுக்கு தொடர்ந்து 18 ஆண்டுகளாக இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து, அமெரிக்க நாட்டின் புளோரிடா பல்கலைக்கழகப் பேராசிரியரும், சாஸ்த்ரா இராமானுஜன் விருது குழுத் தலைவருமான பே.ரா.கிருஷ்ணசாமி அல்லாடி, நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றியபோது, 2005ஆம் ஆண்டு முதல் வழங்கப்படும் இவ்விருதின் துவக்ககால வரலாற்றையும், அதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “அமெரிக்க கணிதவியல் சமூகமும், சாஸ்த்ரா இராமானுஜன் விருது பற்றிய வரலாறு மற்றும் விருது பெற்றவர்களின் விவரம் ஆகியவற்றை பிரசுரித்து, இவ்விருதினை உலக அரங்கில் கௌரவப்படுத்தியுள்ளது. இலண்டன் ராயல் சொசைட்டியும் இவ்விருதினை பெருமைப்படுத்தியுள்ளது.
சர்வதேச அளவில் நோபல் பரிசிற்கு இணையாக கருதப்படும் கணிதவியலின் உயரிய விருதான பீல்ட் விருது பெறுவதற்கான நுழைவு வாயிலாக இவ்விருது திகழ்கிறது. குறிப்பாக, இதுவரை சாஸ்த்ரா விருது பெற்ற ஆறு பேர், தற்போது பீல்ட் விருது பெற்றுள்ளனர்" என்று பெருமையோடு குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: தளக்காவயல் வரத்துக் கால்வாய் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை கட்டுமானப் பணிகளுக்கு இடைக்கால தடை!