தஞ்சாவூர்: இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் டி.குருமூர்த்தி தலைமையில் கும்பகோணம் பாணபுரீஸ்வரர் கோயில் சன்னதி தெருவில் நேற்று முன்தினம் (ஜன.12) 'சனாதனம் (Sanatan) போற்றும், கலாச்சார பொங்கல்' என்ற பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தெரு முழுவதும், செங்கரும்புகளால் அலங்காரம் செய்து 60 அடுப்புகளில் மண்பானையில் பொங்கல் வைக்கும் வைபவம் கோலாகலமாக நடைபெற்றது.
இந்த விழாவில் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம.ராமநாதன், பாஜக தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் சதீஷ்குமார் மற்றும் பல்வேறு இந்து அமைப்பினர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மேலும், இவ்விழாவில் கும்பகோணம் திமுக சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் மற்றும் கும்பகோணம் மாநகராட்சியின் மேயர் கே.சரவணன் (காங்கிரஸ்) ஆகிய இருவரும் பங்கேற்றனர்.
பொங்கல் பானையில் பச்சரிசி இட்டு இந்த சனாதனம் போற்றும், கலாச்சார பொங்கல் விழாவினை தொடங்கி வைத்தனர். இதைத்தொடர்ந்து இந்த நிகழ்வு குறித்து செய்திகள் வெளியான நிலையில், இந்து மக்கள் கட்சி பொதுச் செயலாளரான டி.குருமூர்த்தி வெளியிட்டுள்ள காணொளியில், “கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் வளர்ச்சியைத் தடுக்கும் வகையிலும், அவருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் சில செய்தி ஊடகங்களும், சமூக வலைத்தளங்களும் திரித்து செய்தி வெளியிட்டுள்ளன. இது தவறானது, இதனை யாரும் பரப்ப வேண்டாம்.
கும்பகோணத்தில் இந்து தர்மா சேவா அறக்கட்டளை சார்பில், 13 ஆண்டுகளாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த 13 ஆண்டுகளிலும் கும்பகோணம் க.அன்பழகன் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக தொடர்ச்சியாக பங்கேற்று வருகிறார். இந்து தர்ம சேவா அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளரும், இந்து மக்கள் கட்சி பொது செயலாளரான டி.குருமூர்த்தி இந்து மக்கள் கட்சி நிர்வாகிகளை வரவேற்கும் வகையில் வைக்கப்பட்டிருந்த 'சனாதனம் போற்றும் கலாச்சார பொங்கல்' என்ற பேனரை பயன்படுத்தி, தவறாக செய்தி வெளியிட்டுள்ளன.
கும்பகோணம் எம்எல்ஏ அன்பழகன், கும்பகோணம் தொகுதி மக்களைப் புண்படுத்தாத வகையில், அனைத்து விதமான மதங்களை சேர்ந்த கோயில், பள்ளிவாசல், பேராலய விழாக்களிலும், அனைத்து மதத்தவர்களின் சுக துக்கங்களிலும் பங்கேற்று, மக்களின் தொடர் நன்மதிப்பை பெற்றதன் காரணமாக அவர் தொடர்ந்து 3வது முறையாக இத்தொகுதியில் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்” என்று கூறியுள்ளார். திரித்து வெளியிடப்பட்ட செய்திக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் இந்த காணொளியை இந்து மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் டி.குருமூர்த்தி தற்போது வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தஞ்சாவூர் மாநகராட்சியில் சமத்துவ பொங்கல்.. விளையாடி மகிழ்ந்த அரசு அதிகாரிகள்..!