இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், திருக்காட்டுப்பள்ளி, பழமார்னேரி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் குமார் (37).
இவரின் வீட்டில் உள்ளவர்களிடம், கடந்த 12ஆம் தேதி, தண்ணீர் கேட்பதுபோல் வந்து, அடையாளம் தெரியாத நபர் இரண்டாயிரம் ரூபாய்க்கு சில்லறை கேட்டுள்ளார்.
அப்போது, பீரோவிலிருந்து பணம் எடுத்து வந்தவரை மெஸ்மரிசம் செய்து, வீட்டில் இருந்த நான்காயிரத்து 500 ரூபாயினை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார்.
வீட்டிற்கு வந்த குமாரிடம் இதுகுறித்து அவரது தந்தை தெரியப்படுத்தியதையடுத்து, குமார் அருகில் உள்ள கேமரா உதவியுடன் திருடனை அடையாளம் கண்டறிந்தார்.
இந்நிலையில் கடைவீதியில் நின்று கொண்டு இருந்த அந்த நபரை பிடித்து குமார் காவல்துறையினரிடம் ஒப்படைத்தார். மேலும் அவர் மீது புகாரளித்தார்.
புகாரின் பேரில், திருவையாறு காவல் கண்காணிப்பாளர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகையில், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட அந்த நபர் நெய்வாசல் அரச பட்டுவைச் சேர்ந்த விக்னேஷ் என்ற கண்ணன் (37) என்பது தெரியவந்துள்ளது.
கடந்த சில தினங்களாகவே சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் இது போல நூதன முறையில் கடைகளிலும் வீடுகளிலும் உள்ளவர்களிடம் தண்ணீர் குடிப்பது போலவும் அசதியாக இருப்பதால் அமர்ந்து விட்டுச் செல்வதாகவும் தெரிவித்து பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
அந்த நபரிடம் காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.