தஞ்சாவூர்: உலகம் முழுவதும் இன்று(பிப்.14) காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா அமைப்பினர், ஆபாச காதலை எதிர்ப்பதாகவும், தெய்வீக காதலை போற்றுவதாகவும் கூறி போராட்டம் நடத்தினர்.
இதற்காக, இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா சார்பில் காதலர் தினத்தை முன்னிட்டு கும்பகோணம் அருகேயுள்ள யுனஸ்கோவால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் முன்புவந்தனர். அப்போது, கோயிலின் புனிதத்தைக் கெடுக்கும் வகையில் பல காதல் ஜோடிகள் அத்துமீறி, இக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பெரும் இடையூறாகவும், தமிழர் பண்பாடு மற்றும் கலாசாரத்திற்கும் எதிராகவும் நடந்து கொள்கின்றனர் எனக் குற்றம்சாட்டினர்.
எனவே, இத்தகைய காதல் ஜோடிகளுக்கு இக்கோயில் வளாகத்திலேயே, திருமணம் செய்து வைக்க ஏதுவாக இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா அமைப்பினர் மாநில செயலாளர் கா.பாலா தலைமையில் 10க்கும் மேற்பட்டோர், மலர் மாலைகள், உதிரிப் பூக்கள், வெற்றிலை பாக்கு, பழங்கள், அட்சதை, தாலி சரடு, மாங்கொத்து, அரசாணி கால், ஆகியவற்றுடன் தாராசுரம் வீரபத்திரசுவாமி கோயிலில் இருந்து தாராசுரம் ஐராவதீசுவரர் கோயில் நோக்கி, நாதஸ்வர மேள தாளம் முழக்க ஊர்வலமாக வந்தனர்.
அப்போது, கோயில் பூங்கா நுழைவாயிலில் கும்பகோணம் மேற்கு காவல் ஆய்வாளர் பேபி தலைமையிலான போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். இதனைத் தொடர்ந்து அவர்கள் அங்கேயே ஆபாச காதலை எதிர்ப்பதாகவும், தெய்வீகக் காதலை வரவேற்பதாகவும் கூறி முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
மேற்கத்திய கலாசாரத்தை பின்பற்றி, இந்திய கலாசாரத்தையும், பண்பாட்டையும் கேள்விக்குறியாக்கி, கேலிக்கூத்தாகவும் மாற்றும் ஒரு சில காதல் ஜோடிகளை கண்டித்தும், இளவயது காதல்களால், 18 வயதில் திருமணம் நடந்து 21 வயதில் திருமண முறிவும் ஏற்படுகிறது என்றும், இதனால் குடும்பச் சிதைவு ஏற்படுகிறது எனவும் தெரிவித்தனர். மேலும், காதலர் தினமான இன்று மட்டுமல்லாது, தொடர்ந்து நாள்தோறும் இத்தகைய அறவழி போராட்டங்களை முன்னெடுப்போம் எனவும் அவர்கள் பேட்டியளித்துள்ளனர்.
இதையும் படிங்க:Valentines Day: கொடைக்கானலில் கார்னேஷன் பூக்களின் விலை அதிகரிப்பு!