திருவிடைமருதூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஆரம்பப் பள்ளியில் பணியாற்றிவரும் ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது. அதற்காக திருவிடைமருதூர் ஒன்றியத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் சென்றிருந்தபோது திடீரென்று ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் சுமார் 20 பேருக்கு பணி நிரவல் திட்டத்தின் கீழ் பணிமாறுதல் உத்தரவை கல்வி அலுவலர்கள் கொடுத்தனர்.
இந்நிலையில், திருபுவனம் கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய லதா (49) பணி நிரவல் காரணமாக பட்டுக்கோட்டை ஒன்றியத்திற்கு பணியிடமாறுதல் செய்யப்பட்டதாக உத்தரவு வழங்கப்பட்டது. உத்தரவு தகவலைப் பார்த்த ஆசிரியர் லதா மன அழுத்தம் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு சரிந்து கீழே விழுந்தார். கணவர் ராஜாராம், அக்கம்பக்கத்தினர் ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே லதா உயிரிழந்தார்.
தகவலறிந்து தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சங்கத்தினர், மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் ராமலிங்கம், திருவிடைமருதூர் சட்டப்பேரவை உறுப்பினர் செழியன், அனைத்துக் கட்சி பிரமுகர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள், மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் நேரில் சென்று லதாவின் உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.