தஞ்சாவூர்: ஒவ்வொரு வருடமும் பள்ளிகளிலிருந்து மாணவர்களைச் சுற்றுலா அழைத்துச் செல்வது வழக்கம். இதற்காகப் பேருந்திலோ, ரயிலிலோ இடம் புக் செய்து மாணவர்களை ஆசிரியர்கள் அழைத்து செல்வார்கள். இந்த பயணமும், சுற்றுலாவும் பள்ளி பருவ மாணவர்களுக்கு மறக்க முடியாத நினைவாக மாறிப்போகும். ஆனால் பள்ளியே பேருந்து, ரயில், கப்பல், விமானம் மற்றும் சுற்றுலா தலம் போல் மாறினால் எந்த குழந்தைக்குத்தான் விடுப்பு எடுக்க மனம் வரும்.
அவ்வாறு தான் மாரியுள்ளது தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிள்ளையார்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி. இப்பள்ளியில் 130 மாணவ, மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட நிர்வாகம், பள்ளி மேலாண்மை குழு மற்றும் ஆசிரியர்கள் முயற்சியால் இப்பள்ளி கட்டிட சுவர் ஆகாய விமானம், இரயில், கப்பல், போக்குவரத்து பஸ் என வண்ண ஓவியங்களால் அழகுற காட்சியளிக்கின்றன.
இரயில் பெட்டி வரையப்பட்டு, முகப்பில் இரயில் இன்ஜின் வரைந்து அதில் பள்ளி தொடங்கப்பட்ட ஆண்டான 22.06.1966 என எண் எழுதப்பட்டுள்ளது. மேலும் பஸ் ஓவிய கட்டிடத்தில் தமிழ்நாடு அரசின் பள்ளி சார்ந்த திட்டங்களான காலை உணவுத் திட்டம், இசைத் திருவிழா, ஊஞ்சல் , உள்ளிட்ட திட்டங்களையும் எழுதி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் தனியார் பள்ளிகளைப் போலவே சட்டையில் தனி முத்திரை (லோகோ) அச்சிடப்பட்ட கலர் யூனிபார்மை வாரத்தில் ஒருநாள் பள்ளி மாணவர்கள் அணிந்து வருகின்றனர். இதனால் மாணவ, மாணவியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றனர். மேலும் பள்ளி வளாக காம்பவுண்ட் சுற்று சுவரில் பாரம்பரிய விளையாட்டுகள், கலாச்சாரம், பண்பாடு, வீரம், கொடை ஆகிய ஓயியங்களும் வரையப்பட்டுள்ளது. மேலும் விண்ணை தொடும் வித்தகர்கள் எனும் பேரில் வண்ணத்து பூச்சி படத்துடன் செல்பி கார்னர் அமைக்கப்பட்டுள்ளது.
தஞ்சை பெரியக்கோயில் கட்டிடக்கலை, ஏவுகணைகள், விவசாயம், அழிந்துவரும் உயிரினங்கள், மண் வளம், நீர் பாதுகாப்பு, இயற்கை வனம் பாதுகாப்பு, நாட்டுப்புற கலைகள், தமிழ் பாரம்பரிய இசைக் கருவிகள், தற்காப்பு கலை, மற்றும் மனித உடலின் பாகங்களை விளக்கும் படங்கள் ஆகியவையும் ஓவியமாக அமைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் வரைபடங்கள் (மேப்), சூரிய கோள்கள், உணவு வகைகள், விண்ணில் ஏவப்பட்ட முதல் செயற்கை கோள், தேசத் தலைவர்களின் பொன்மொழிகள் உள்ளிட்டவையும் ஓவியமாக வரையப்பட்டு அழகுற பள்ளி முழுவதும் காணப்படுகிறது. இவற்றை பள்ளி மாணவர்கள் படிக்கும் போது நல்லொழுக்கம் ஏற்படுவதற்கான வழிகளை ஏற்படுத்துகிறது.
இதுகுறித்து பள்ளி ஆசிரியை சிவசங்கரி கூறுகையில், “குழந்தைகளுக்கு ஏற்றார் போல் பள்ளியின் உட்கட்டமைப்பை மாற்றியதாகவும், மாணவர்கள் விமானத்தை பார்க்க வேண்டும் என்ற ஏக்கத்தை போக்கும் வகையில் ஆகாய விமானம் ஓவியத்தை பள்ளியின் கட்டிட மேல்புறத்திலும், இரயிலை பக்கவாட்டு சுவற்றிலும் வரைந்து மாணவர்கள் விமானத்தில் பறப்பது போல உணர்வும், இரயிலில் செல்வது போன்ற உணர்வும் ஏற்பட்டு மகிழ்ச்சி அடைகின்றனர்.
என்றும் பள்ளிக்கூடம் வண்ணமயமாக இருப்பதால் மாணவர்கள் உற்சாகம் அடைகின்றனர். மாணவர்கள் மறந்து விட்ட பண்பாடும், கலாச்சாரமும் அப்டேட் செய்யப்படுகிறது என்று தலைப்பிட்டு பல்வேறு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களும், பெற்றோரும் மகிழ்ச்சி அடைகின்றனர். இதுபோன்று அனைத்து அரசுப் பள்ளிகளிலும் உட்கட்டமைப்பை மாற்றினால் வருகைப் பதிவு சதவீதம் கூடும், தரம் உயரும்” என்று நம்பிக்கையுடன் மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.
இந்நிலையில் பிள்ளையார்பட்டியில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்ற பள்ளிகளுக்கு முன்னோடியாக விளங்கியுள்ளது. குழந்தைகளுக்காக எடுக்கப்பட்டுள்ள இவர்களது இந்த முயற்சி அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. நான் படிக்கும் போது இப்படியெல்லாம் வசதிகள் இல்லையே என வருந்துவதற்கு பதிலாக தங்களால் இயன்ற முயற்சியை அவரவர் பள்ளிகளுக்கு செய்து மகிழலாம்.
இதையும் படிங்க: மதுரவாயல் அருகே அழுகிய நிலையில் மீட்கப்பட்ட ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை!