தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள மண்டலக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் வீரவேல் விசிலுண்டார். இவர் நன்னீர் இறால் வளர்ப்பில் தென்னிந்திய அளவில் விருதுபெற்றவர். இவர் சர்வதேச விருதுக்கும் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
பலரின் ஏளனத்திற்கு மத்தியில் சிறிய அளவில் நன்னீர் இறால் வளர்ப்பைத் தொடங்கி இன்றைக்கு 17 ஏக்கர் நிலப்பரப்பில் அனைவரும் வியக்கத்தக்க வகையில் நன்னீர் இறால் வளர்ப்பில் ஒரு புரட்சியை உருவாக்கி கடல்நீரில் மட்டுமல்லாமல் நல்ல நீரிலும் அதிக அளவில் இறால் உற்பத்தியை செய்ய முடியும் என்று நிரூபித்து சாதனை படைத்துள்ளார்.
இறால் பண்ணையின் கழிவுநீரானது சுற்றியுள்ள விளைநிலங்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் என்று இப்பகுதி விவசாயிகள் பயந்த நிலையில், இந்த நீர் பயிருக்கு உரமாகச் செயல்படும் என்றும் இதன்மூலம் அதிக மகசூலை எட்ட முடியும் எனவும் சவால்விட்டு இறால் கழிவுநீரை பயிர்களுக்குப் பாய்ச்சி அதிக மகசூல் பெற வழிவகுத்தார் வீரவேல்.
இந்நிலையில் கஜா புயலின் தாக்கத்தால் இவரது இறால் பண்ணை சின்னாபின்னமாகி இதில் உள்ள தளவாடங்கள், இயந்திரங்கள் அனைத்தும் சேதமான நிலையில் கடுமையான இழப்பு ஏற்பட்டு கடந்த ஒரு வருடமாக இறால் வளர்ப்புத் தொழில் முடங்கியது.
அரசிடமிருந்து சிறு தொகைகூட இழப்பீடு கிடைக்காத நிலையில் அரசு உதவி கிடைத்தால் தடைப்பட்ட இறால் உற்பத்தித் தொழிலை மீட்டெடுக்க முடியும் என்றார் வீரவேல். நன்னீர் இறால் உற்பத்தியை அதிகரிக்கும்வகையில் இவர் விவசாயிகளுக்கும் மாணவ-மாணவியருக்கும் இலவசமாகப் பயிற்சி அளித்துவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க... அலையோடு போராடும் மீனவர்களுக்கு வருமானம் அள்ளித்தரும் கூண்டு மீன்வளர்ப்பு!