தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே கோதண்டராமன் நகரைச் சேர்ந்தவர் வேலாயுதம் மகன் சுதாகர் (40). இவர் வளப்பக்குடி ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.
இவர், கடந்த செப்.30 ஆம் தேதியன்று மதியம் ஒரு மணியளவில் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தோடு வெளியூர் சென்றுவிட்டு மறுநாள் மாலை 7 மணியளவில் வீட்டிற்கு வந்துள்ளார்.
பிறகு வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது பின்கதவு திறக்கப்பட்ட நிலையில் பீரோவிலிருந்த 42 சவரன் நகைகள் திருடு போனது தெரியவந்தது. உடனடியாக இதுகுறித்து திருவையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், சந்தேகத்தின் பேரில் திருவையாறு திருமஞ்சன வீதியைச் சேர்ந்த ஸ்டீபன் மகன் மார்ட்டின் பிரபுராஜ் (31) பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில், தானும், திருவையாறு மேலவீதி மெயின் ரோட்டைச் சேர்ந்த சரவணக்குமார் (31), தனது அண்ணன் ஜான் பிரபுராஜ் (47), திருவெறும்பூர் தனமணி நகர் துரைசாமி புரத்தைச் சேர்ந்த தேவா (40) ஆகிய நான்குபேரும் சேர்ந்து திருடியதாக ஒப்புக்குகொண்டார்.
இதையடுத்து, உடனடியாக அவர்கள் நான்கு பேர்களையும் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து உருக்கி வைக்கப்பட்ட 32 1/2 சவரன் நகையை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, நான்கு பேரையும் திருவையாறு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகைகள் திருட்டு - 24 மணிநேரத்தில் கொள்ளையனைப் பிடித்த காவல் துறை!