தஞ்சாவூர்: டெல்டா மாவட்டங்களில் தற்போது கார்த்திகை மாத பனி மூட்டம் மற்றும் அவ்வப்போது பெய்யும் திடீர் மழை காரணமாக கடந்த சில நாட்களாக கும்பகோணம் பூக்கடைத் தெருவிற்கு வரும் பூக்களின் அளவு வெகுவாக குறைந்துள்ளது. ஆனால் நாளை சுபமுகூர்த்தம், கார்த்திகை தீபத்திருவிழா, கோயில்களில் உற்சவங்கள், ஐயப்ப பக்தர்கள் சீசன் ஆகியவற்றால் பூக்களின் தேவையும் அதிகரித்துள்ளது.
ஆனால் இதற்கு ஈடுகட்டும் அளவிற்கு பூக்களின் வரத்து இல்லை. இந்த நிலையில் இன்று (டிச.3) கும்பகோணம் பூக்கடைத் தெருவில் பூக்களில் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. குறிப்பாக நேற்றைய விலையை காட்டிலும் இன்று ஒவ்வொரு பூவும் 3 முதல் 4 மடங்கு விலை உயர்ந்ததால், பூக்கள் வாங்க வந்தவர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
மேலும் இன்று கனகாம்பரம் கிலோ ரூ.1,200, காக்கடா கிலோ ரூ.1,000, மல்லிகை கிலோ ரூ.2,000, முல்லை கிலோ ரூ.1,500, ரோஜா கிலோ ரூ.250, செவ்வந்தி கிலோ ரூ.160 என விலை போனது. மேலும் இன்று நண்பகல் வரை கும்பகோணம் பூக்கடைகளுக்கு, வேதாரண்யம் பகுதியில் இருந்து வரும் மல்லிகை மற்றும் முல்லை பூக்கள் வராததால், பூக்களின் விலை அதிகரித்த போதும் பூக்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டது. இதனால் மக்கள் பலரும் ஏமாற்றம் அடைந்து சென்றனர்.
ஈரோடு பூ நிலவரம்: அதேபோல் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டாரத்தில் நேற்று கிலோ ரூ.2,205க்கு விற்கப்பட்ட மல்லிகை இன்று ரூ.3050 ஆக உயர்ந்துள்ளது. இங்கு கொள்முதல் செய்யும் பூக்கள் ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
நேற்று கிலோ ரூ.1,200க்கு விற்கப்பட்ட முல்லை இன்று ரூ.2,150க்கும், செண்டுமல்லி ரூ.29இல் இருந்து ரு.50க்கும், கோழிக்கொண்டை 39 ரூபாய்க்கும், சம்பங்கி கிலோ ரூ.20இல் இருந்து ரூ.160க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதையும் படிங்க: ஒரு கிலோ மல்லிகை பூ விலை ரூ 5000