தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த மாணவர்கள் பலர், புதுக்கோட்டையின் கிள்ளிக்கோட்டையில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் சத்துணவுத் திட்டத்தின் கீழ் முட்டை, பருப்பு உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டதால், அதனை வாங்குவதற்காக உசிலம்பட்டியைச் சேர்ந்த 25 மாணவர்கள் பள்ளிக்குச் சென்றுள்ளனர்.
அங்கு முட்டை உள்ளிட்ட பொருள்களை வாங்கிக்கொண்டு மீண்டும் வீடு திரும்பியுள்ளனர். அப்போது அங்கு இருந்த இளைஞர்கள் சிலர் அந்த வழியாக வந்த மினிலோடு வேனை தடுத்து நிறுத்தி, மாணவ, மாணவிகளை உசிலம்பட்டி கிராமத்தில் இறக்கிவிடுமாறு ஓட்டுநரிடம் கூறியுள்ளனர்.
மினிலோடு வேனில் இருந்து குதித்த பள்ளி மாணவர்கள்
அதன்படி அவர்களை ஏற்றிக்கொண்டு சென்ற மினிலோடு வேன், உசிலம்பட்டி கிராமத்தில் நிற்காமல் சென்றுள்ளது. இதனால் தங்களைக் காப்பாற்றும்படி மாணவ, மாணவிகள் கூச்சலிட்டுள்ளனர். மேலும் அருகில் உள்ள மேட்டுப்பட்டி கிராமத்தையும் தாண்டி வேன் சென்றதால், பதற்றமடைந்த ஐந்து பேரும் ஓடும் வேனில் இருந்து கீழே குதித்துள்ளனர்.
இதில் மாரிமுத்து (13), ரம்யா (13), சரண்யா (13), சசிரேகா (13), கலைவாணி (12) ஆகிய ஐந்து மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் மாணவர்களை மீட்டு, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதுகுறித்து வேன் ஒட்டுநர் ராஜசேகரனிடம் (36) காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மாணவர்களை கடத்தவில்லை எனவும், வேனை நிறுத்தவதற்குள் மாணவர்கள் குதித்துவிட்டதாகவும் ஓட்டுநர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆபாச படங்கள் பார்ப்போரை குறிவைத்து ரூ.34 லட்சம் மோசடி