தஞ்சாவூர்: சொத்து கேட்டு தொடர்ந்து தொந்தரவு செய்து வந்த மருமகளை, மாமனார் சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் பட்டீஸ்வரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணத்தை அடுத்த பட்டீஸ்வரம் கீழவீதியில் உதவி கல்வித்துறை அலுவலராக இருந்து ஓய்வு பெற்ற சண்முகவேல் (85), தனது மனைவி ஜெயராணியுடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு, ராஜேஷ் கண்ணன் மற்றும் ஜெகதீஸ் கண்ணன் என இரு மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.
மாற்றுத்திறனாளியான மூத்த மகன் ராஜேஷ் கண்ணன், அவரது மனைவி பிரேமா (40), மகன்களான கலைச்செல்வன் மற்றும் அருட்செல்வன் ஆகியோருடன் அதே பகுதியில் மற்றொரு வீட்டில் வசித்து வருகின்றனர். மருமகள் பிரேமா தனது வீட்டின் அருகே வசிக்கும் மாமனார் சண்முகவேலிடம் அடிக்கடி சொத்து கேட்டு தொந்தரவு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஆவடியில் விசாரணைக்குச் சென்ற காவலரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் கைது!
இதே போல நேற்று இரவும் மருமகள் பிரேமா, சண்முகவேலிடம் மீண்டும் சொத்துக்காக வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாமனார் சண்முகவேல் இன்று காலை, வீடு புகுந்து பிரேமாவை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளார். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த பிரேமா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து சண்முகவேல் தானாகவே முன்வந்து மருமகளைப் படுகொலை செய்த விவரத்தைத் தெரிவித்து பட்டீஸ்வரம் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து பட்டீஸ்வரம் போலீசார், சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று, பிரேமாவின் உடலை கைப்பற்றினர்.
பின்னர், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் உடற்கூறு ஆய்விற்காக பிரேமா உடலைக் கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சொத்து கேட்டு தொடர்ந்து தொந்தரவு செய்து வந்த மருமகளை, மாமனாரே வெட்டி கொலை செய்த சம்பவம் பட்டீஸ்வரத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியினையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் ரூ.4 கோடி மதிப்புள்ள கொட்டை பாக்கு கடத்தல் - முக்கிய நபர் கைது!