தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள வாட்டாத்திக்கோட்டை கொல்லைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன், இவரது விவசாய நிலத்திற்காக மின் இணைப்பு பெறுவதற்கு மின்சார வாரியத்தில் பணம் கட்டியுள்ளார். இதையடுத்து மின் இணைப்பு வழங்குவதற்கான உத்தரவும் கிடைத்துள்ளது.
இந்த நிலையில் முருகேசனின் அண்டை நில உரிமையாளரான ராமநாதன் என்பவரின் நில வழியாக மின்கம்பங்கள் கொண்டு செல்வதற்காக அவரிடத்தில் ஒப்புதல் கடிதத்தை பெற்ற முருகேசன் மின்வாரியத்தில் ஒப்படைத்துள்ளார்.
ஒரத்தநாடு மின்வாரிய அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், காவல்துறையினர் முருகேசனின் விவசாய நிலத்திற்கு மின் இணைப்பு கொடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ராமநாதன் மற்றும் அவரது குடும்பத்தார்கள் தங்களது நிலத்தின் வழியாக மின் கம்பிகளை கொண்டு செல்லக்கூடாது என மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் அலுவலர்கள் ராமநாதனிடம் “தங்களது இடத்தின் வழியாக மின்கம்பங்களை கொண்டுசெல்ல ஒப்புதல் கடிதம் அளித்துள்ளீர்கள் இப்பொழுது ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள்” என கேட்டனர். அதற்கு ராமநாதன் தான் மட்டும் ஒப்புதல் அளித்துள்தாகவும் தனது குடும்பத்தார் ஒப்புதல் அளிக்கவில்லை என்று அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இருந்தும் அலுவலர்கள் எங்களிடத்தில் தங்களின் அனுமதி கடிதம் உள்ளது எனவே மின் இணைப்பு கொடுப்பது எங்களின் கடமை என்று கூறி மின் இணைப்பு கொடுக்க முயன்றப்போது திடீரென ராமநாதன் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றியுள்ளார். மேலும் இவரது வீட்டில் உள்ள பெண்களும் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக மிரட்டியுள்ளனர்.
இதையடுத்து அங்கு இருந்த மின் வாரிய அலுவலர்கள் மின் இணைப்பு வழங்கும் பணியை நிறுத்திவிட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளனர். திடீரென அலுவலர்கள் முன்னிலையில் ஒரு குடும்பத்தினர் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: குடிபோதையில் பொதுமக்களை தாக்கிய இருவருக்கு வலைவீச்சு!