தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய, கடந்த ஆண்டு பயிர் காப்பீட்டிற்கான இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்கக் கோரி, சாக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள வேளாண்துறை உதவி இயக்குநர் அலுவலகம் முன்பு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க விவசாயிகள் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
அப்போது, 2019-20ஆம் ஆண்டிற்கு பயிர் காப்பீட்டு பிரீமியம் செலுத்திய விவசாயிகளுக்கு, கடந்த மார்ச் 15ஆம் தேதி சோதனை அறுவடை முடிந்து விட்ட நிலையில், மத்திய, மாநில வேளாண்துறை மகசூல் இழப்பு குறித்த அறிவிப்பினை இதுவரை வெளியிடவில்லை.
மேலும் மகசூல் இழப்பீடு குறித்த அறிவிப்பினை உடனடியாக வெளியிட வேண்டும். மேலும் விவசாயிகளுக்கான இந்த இழப்பீடு என்பது இலவசமோ, மானியமோ அல்ல, அவர்கள் செலுத்திய பீரியத்தின் பேரில் அவர்களுக்கான இழப்பீட்டு தொகையாகும். தமிழ்நாடு முழுவதும் அத்தொகையானது சுமார் ரூ. 1,050 கோடியாக உள்ளது.
ஏற்கனவே கரோனா நோய்த் தொற்றால் வருவாயின்றி தவிப்போருக்கு இந்த இழப்பீட்டு தொகை பெரும் உதவியாக இருக்கும். எனவே இதனை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் உடனடியாக பிரீமிய தொகையை வழங்க முன்வர வேண்டும் என்று வலியுறுத்தினர்.