தஞ்சாவூர்: குறள்நெறிச்செல்வர் என அன்போடு அனைவராலும் அழைக்கப்பட்டவர், எளிமையாக எல்லோரிடத்திலும் பழககூடியவர், திமுக முன்னாள் அமைச்சர் S.N.M உபயதுல்லா (82). இவர் தஞ்சையில் 1989, 1996, 2001, 2006 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று 4 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்.
கடந்த 2006 - 2011 ஆம் ஆண்டு திமுக அமைச்சரவையில் வணிகவரித்துறை அமைச்சராக பணியாற்றினார். திமுக கட்சி சார்பில் கலைஞர் விருது பெற்றுள்ளார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக தமிழக அரசின் பேரறிஞர் அண்ணா விருது வழங்கப்பட்டது. தஞ்சை நகர திமுக செயலாளராக கடந்த 27 ஆண்டுகள் பணியாற்றினார்.
தற்போது திமுக கட்சியில் மாநில வர்த்தக அணி தலைவராக பொறுப்பு வகித்து வந்தார். அவரது மனைவி ஜன்னத்பீவி கடந்த 2020ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். அவருக்கு ஒரு மகன் ஒரு மகள். மகன் சாந்திமைதீன் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இயற்கை எய்திவிட்டார். இந்த நிலையில் உபயத்துல்லா சீனிவாசபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அவரது சகோதரியின் பேத்தி திருமணத்துக்குச் செல்வதற்காக இன்று (பிப்.19) காலை புறப்பட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென அவர் மயக்கமடைந்ததால் அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை தஞ்சாவூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தஞ்சாவூர் முத்தமிழ் மன்றம் உள்பட பல்வேறு அமைப்புகளில் பொறுப்பு வகித்து வந்த உபயத்துல்லா நீண்ட காலமாக தமிழ்ப் பணி ஆற்றி வந்தார்.
இவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது பள்ளி கட்டடங்கள் கட்ட நிதி உதவி அளித்துள்ளார். உபயதுல்லாவின் இறப்பு திமுக கட்சியினருக்கு மிக பெரிய இழப்பு என்று முக்கிய உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். பொதுமக்கள், உறவினர்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், வணிகர்கள் என அனைத்து தரப்பினரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.