தஞ்சாவூர்: திருமலை சமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (23). இவர் சொந்தமாக மினி வேன் வைத்து பால் கம்பெனியில் ஒப்பந்த அடிப்படையில் வேன் ஒட்டி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி அன்று வீட்டை விட்டு மோட்டார் சைக்கிளில் வெளியே சென்ற அவர், பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது சகோதரர் சரவணன் வல்லம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அப்புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி அன்று தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை உள்ள நெய்வாசல் தென்பாதி வாய்க்காலில் இளைஞரின் உடல் ஒன்று இறந்த நிலையில் ஒதுங்கி உள்ளது. அந்த இளைஞரின் உடலில் வெட்டுக் காயங்களும் இருந்துள்ளது.
அதன் பின்னர் தகவல் அறிந்து வந்த போலீசார், வாய்க்காலில் ஒதுங்கிய இளைஞரின் உடலை மீட்டு விசாரணை நடத்தியபோது, அந்த வாலிபரை யாரோ வெட்டிக்கொண்டு உடலை ஆற்றில் வீசியது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் இச்சம்பவம் குறித்து வல்லம் போலீசாருக்கு தகவல் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து காணாமல் போன சக்திவேலின் உறவினர்களை அழைத்துச் சென்று உடலை சோதனை செய்தனர். அப்போது கொலை செய்யப்பட்ட நபர் சக்திவேல்தான் என்பதை போலீசார் உறுதிபடுத்தினர். இதனையடுத்து சக்திவேலின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அவருடைய குடும்பத்தினரிடம் உடலை போலீசார் ஒப்படைத்தனர்.
இது குறித்து வல்லம் காவல் துறை டிஎஸ்பி நித்யா உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப் இன்ஸ்பெக்டர் அடைக்கல ஆரோக்கியசாமி டேவிட், ஜோஸ்பின் சித்தாரா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சாமிநாதன், ஆனந்தராஜ், புவனேஸ் ராஜதுரை, ரஞ்சித் குமார் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படையினர் இந்த கொலை தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது சக்திவேல் கடைசியாக செல்போனில் பேசிய பாலகுரு என்பவரிடம் விசாரணை செய்துள்ளனர். ஆனால், அந்த நபர் தலைமறைவாகி இருந்த நிலையில், நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 14) வல்லம் புதூர் சேத்தி கிராம நிர்வாக அலுவலர் வள்ளி முன்பு ஆஜராகி உள்ளார்.
அப்போது, தான் சக்திவேலை கொலை செய்ததாக கூறி சரண் அடைந்துள்ளார். இதனையடுத்து அவரை வல்லம் போலீசாரிடம் கிராம நிர்வாக அலுவலர் ஒப்படைத்தார். பின் போலீசாரிடம் பாலகுரு பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த கொலை தொடர்பாக வல்லம் போலீசார் வழக்குப் பதிவு செய்து பாலகுரு (48), அவரது மகன் துரைமுருகன் (19), மகள் தேவிகா (20), சத்யா (23), கதிர்வேல் (43), கூலிப்படையைச் சேர்ந்த கிரிவாசன் (45), சந்தோஷ் (37), கார்த்தி (37) ஆகிய 8 பேரையும் கைது செய்துள்ளனர்.
மேலும், கொலைக்கு பயன்படுத்திய சொகுசு காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர், கைது செய்யப்பட்ட 8 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். விசாரனையில் காதல் தகராறில் இளைஞரைக் கொன்றது தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க: மனைவி மற்றும் 8 மாத குழந்தையை கோடாரியால் கொன்ற கணவர் கைது!