தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள அதிராம்பட்டினம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதி காந்திநகர். இது மீனவர் குடியிருக்கும் பகுதி ஆகும். 15 வார்டுகளில் உள்ள கழிவுநீர் இந்த காந்திநகர் பகுதியில் மையப் பகுதி வழியாகத்தான் செல்ல வேண்டியுள்ளது. இப்படி இருக்கையில் மற்றப் பகுதிகளில் இருந்து வரும் கழிவு நீர் பிளாஸ்டிக் மற்றும் இதர குப்பைகளால் வெளியேறாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது.
இந்நிலையில் மழை பெய்யும்பொழுது கழிவுநீர் இப்பகுதியில் உள்ள ஏழை, எளிய, மீனவ மக்களின் குடிசை வீடுகளில் புகுந்துவிடுகிறது. இதனால் கழிவுநீர் வெளியேறாமல் வீட்டுக்குள்ளேயே தங்கிவிடுவதால் தொற்று நோய் ஏற்பட்டு இப்பகுதி மக்கள் அவதிப்பட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுவிடுகிறார்கள். இதேபோல ஒரு வருடத்திற்கு முன் இப்பகுதியில் ஒரு சிறுவன் மர்ம காய்ச்சலால் இறந்தச் சம்பவம் இப்பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை தடுக்கும் விதமாக வாய்க்கால் வடிகால் வசதி அமைத்துத் தரப்பட்டது. இது நாளடைவில் கழிவுநீர் வாய்க்கால் ஆக மாறி இங்குள்ள மக்களுக்கு பெரும் சிரமத்தை தந்துள்ளது. அதேபோல இந்த கழிவுநீர் வெளியாகி சென்றாலும்கூட துறைமுக வாய்க்காலில் படகு நிறுத்த வேண்டிய இடத்தில் தேங்கிவிடுகிறது. இதற்கு காரணம் அங்குள்ள கோரை புற்கள் எனக் கூறப்படுகிறது. இதனால் துறைமுக வாய்க்காலில் நிறுத்தப்பட்ட படகுகளை மீனவர்கள் கடலுக்கு எடுத்துச் செல்லும் போதும், படகுகளை நிறுத்தும் போதும் அந்தக் கழிவு நீரில் இறங்கிதான் செய்ய வேண்டியுள்ளது.
எனவே, இந்த கழிவுநீர் எளிதில் வெளியேறவும், இப்பகுதி மக்கள் பாதிக்காத வகையிலும் கழிவுநீர் வாய்க்காலை முறைப்படுத்தி அமைக்க இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.